ஆபத்தான நிலையில் சாலையில் தொங்கும் கேபிள்கள் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?


சென்னை பிளாக்கர்ஸ் சாலையில் சாலையோரம் ஆபத்தான நிலையில் தொங்கும் கேபிள்கள். படங்கள்: எஸ்.சத்தியசீலன்.

சொந்த காரை வைத்திராத ஒரு நிறுவனத்தால், உலகம் முழுவதும் வாடகை கார் சேவையை வழங்க முடிகிறது. சொந்தமாக ஒரு பொருளை தயாரிக்காத ஒரு நிறுவனத்தால், மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் விற்க முடிகிறது.
இவை அனைத்தும் இணைய சேவையால் சாத்தியமாகிறது.

அந்த அளவுக்கு, நகர்ப் புறங்களில் இன்று குடிநீருக்கு அடுத்தபடியாக மிக அத்தியாவசிய தேவையாக இணைய சேவை மாறியுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் இணைய சேவை இன்றி இயங்கவே முடியாது. அதற்கடுத்த அத்தியாவசிய தேவையாக கேபிள் டிவி சேவை உள்ளது. இவ்விரண்டும் பெரும்பாலும் கேபிள்கள் வழியாகவே வீடுகள், அலுவலகங்களை சென்றடைகின்றன. இந்த கேபிள்களை உள்ளாட்சி அமைப்புகள் முறைப்படுத்தும் திட்டம் எதுவும் வகுக்காததால், மாநகரின் பல்வேறு பகுதிகளில் கேபிள்கள் வலைப் பின்னல்கள் போன்று பின்னிப் பிணைந்து காட்சியளிக்கிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 27 தனியார் நிறுவனங்கள் தங்கள் இணைய சேவை வழங்கும் கண்ணாடி இழை கேபிள்கள் (OFC) மற்றும் தொலைக்காட்சி சேவை வழங்கும் கேபிள்களை சுமார் 5 ஆயிரம் கிமீ நீளத்துக்கு மேல் நிறுவியுள்ளன. அவற்றிலிருந்து வீடுகளுக்கு கொண்டு செல்லும் கேபிள்கள் அனைத்தும் மாநகராட்சியின் சாலையோர தெரு மின் விளக்கு கம்பங்களையே நம்பியுள்ளன. ஒருசில பெறுநிறுவனங்கள் சொந்தமாக கம்பங்களை அமைத்துக் கொள்கின்றன.

இந்நிறுவனங்களிடம் வசூலிக்கப்படும் வாடகை மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.20 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. பல நிறுவனங்கள் மாநகராட்சியிடம் முறையாக அனுமதி பெற்று கேபிள்களை நிறுவுகின்றன. சில நிறுவனங்கள் அனுமதி பெறாமலும், பெற்ற அனுமதியைவிட அதிகமான நீளத்துக்கும் கேபிள்களை நிறுவியது அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம் அருகே நடைபாதையில் பாதசாரிகளுக்கு இடையூறாக தொங்கும் கேபிள்கள்.

இந்த இணைய சேவை மற்றும் கேபிள் டிவி நிறுவனங்களுக்கு உயர்மட்ட செல்வாக்கு இருப்பதால், விதிகளை முறையாக பின்பற்றி, கேபிள்களை நிறுவுவதில்லை. ஆபத்தான முறையில், பாதசாரிகளின் கழுத்தை பதம் பார்க்கும் வகையில் சாலைகளில் தொங்கிக்கொண்டு இருக்கின்றன. குறிப்பாக சென்னை மாநகரில் நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலை, வால்டாக்ஸ் சாலை, மிண்ட் சாலை, எல்லிஸ் சாலை, பாந்தியன் சாலை உள்ளிட்ட மாநகரின் பெரும்பாலான சாலைகளில் மாநகராட்சி மின் விளக்கு கம்பங்கள் மூலமாக ஆங்காங்கே சாலைகளின் குறுக்கே கொண்டு செல்லப்படுகின்றன. உயரமான கனரக வாகனங்கள் ஏதேனும் சென்று, கேபிள்கள் அறுந்து தொங்கி, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

கடந்த 18-ம் தேதி கூட, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவன தலைவர் சு.ஆ.பொன்னுசாமியின் மகன் பொன்மணிகண்டன் லயோலா கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் அறுந்து தொங்கிக்கொண்டிருந்த கேபிளில் சிக்கி, கீழே விழுந்து கழுத்து உள்ளிட்ட பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது.

இது தொடர்பாக பொன்னுசாமி கூறும்போது, “சாலையோரங்கள் மட்டுமின்றி சாலையின் குறுக்கு நெடுக்குமாக கட்டிவைக்கப்பட்டிருக்கும் கேபிள் டிவி, தொலைபேசி நிறுவனங்களின் கேபிள்களை அகற்ற மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, பெரிய அளவில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்” என்றார்.

இந்த கேபிள் நிறுவனங்கள் வழங்கும் இணைய சேவைகளை மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசு இ-சேவை மையங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தி வருவதால், இந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், கேபிள்கள் துண்டிப்பு போன்றநடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுக்க நேர்ந்தால், அது அரசுத் துறைகள் செயல்பட முடியாத நிலையும், பொதுமக்களுக்கு காலத்தோடு அரசின் சேவைகள் கிடைக்க முடியாத சூழலும் ஏற்பட்டு வருவது மாநகராட்சி நிர்வாகத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

அதனால் சென்னை தரமணி பகுதியில் ராஜீவ்காந்தி சாலை அமைக்கும்போது, தொலைநோக்கு பார்வையுடன், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கேபிள்களை கொண்டு செல்ல சாலையோரம் தனி கான்கிரீட் பாதையே அமைக்கப்பட்டது. பின்னர் அந்த நடைமுறையை அரசு கைவிட்டு, அதை மழைநீர் வடிகால்வாயாக மாற்றிவிட்டது.

மாநகரப் பகுதியில் ஆபத்தான நிலையில் தொங்கும் கேபிள்களை அகற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி சார்பில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக தொங்கும் கேபிள்கள் அகற்றப்படுகின்றன. மாநகராட்சிக்கு புகார் வந்தால், எந்த கிழமையாக இருந்தாலும் உடனுக்குடன் அகற்றப்படுகிறது. தொடர்ந்து விதிமீறல் கேபிள்கள், பொதுமக்களுக்கு இடையூறாக தொங்கும் கேபிள்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

அவ்வாறு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 3 ஆயிரத்து 299 கிமீ நீள கேபிள்கள் அகற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகரம் இயற்கையாக வளர்ந்த நகரம். திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட நகரம் இல்லை. மாநகரின்அனைத்து சாலைகளிலும் கேபிள்களுக்கென தனி பாதை அமைக்க சாத்தியம் இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கேபிள்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

x