சென்னை கோட்டத்தில் ரத்து செய்யப்பட்ட 54 ரயில்கள் மீண்டும் இயக்கப்படுமா?


சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் - கும்மிடிப் பூண்டி, சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - வேளச்சேரி (கடற்கரை - எழும்பூர் 4-வது பாதை அமைக்கும் பணி காரணமாக சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே தற்போது ரயில்கள் இயக்கப்படுகின்றன) உள்ளிட்ட வழித்தடங்களில் தினசரி 300-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த மின்சார ரயில்களில் நாள்தோறும் 10 லட்சம் பேர் பயணிக்கின்றனர். குறிப்பாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடம் மற்றும் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடம் ஆகியவற்றில் தலா 4 லட்சம் பேர் தினசரி பயணம் செய்கின்றனர். எனவே, முக்கிய வழித்தடங்களில் கூடுதல் மின்சார ரயில் சேவைகள் வழங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, கடந்த ஆண்டு பராமரிப்பு பணி காரணத்தை கூறி, ரத்து செய்யப்பட்ட 54 ரயில்கள் மீண்டும் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடத்தில் உருவாக்கியுள்ளது.

புதிய கால அட்டவணை: மின்சார ரயில்களின் காலஅட்டவணை ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படும். அப்போது, பயணிகளின் வசதிக்காக ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஆனால், கடந்த ஆண்டு ஜூலையில் வெளியான ரயில்வே கால அட்டவணையில், ரயில் சேவைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அதாவது, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் 16 ரயில்களும், சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் வேளச்சேரி வழித்தடத்தில் தலா 19 ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இது பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, பராமரிப்பு பணிக்காக ரயில்களின் சேவை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த 54 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு 11 மாதங்கள் கடந்துள்ள நிலையில், மீண்டும் அந்த ரயில்களின் சேவைதொடங்குவது தொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

இது குறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: "நாளுக்கு நாள் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பொதுவாக, பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது ரயில் சேவைகளும் அதிகரிக்கப்படும். ஆனால், கடந்த ஆண்டு ரயில் சேவைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

கே.பாஸ்கர்

குறிப்பாக, சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்துக்கு இரவு 10.55 மணிக்கு கடைசி ரயில் இயக்கப்படுகிறது. அதன் பிறகு, அரக்கோணத்துக்கு ரயில் சேவை கிடையாது. அதேநேரத்தில், சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 1.20 மணிக்கு அரக்கோணத்துக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. புதிய கால அட்டவணையில், இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் நள்ளிரவில் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவர்கள் ரயில் நிலைய நடைமேடையிலேயே கொசுக்கடியுடன் காத்திருந்து அதிகாலையில் இயக்கப்படும் முதல் ரயிலைப் பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது. எனவே, ரயில்வே நிர்வாகம் பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து திருவள்ளூர் ரயில் பயணிகள் நலச்சங்க செயலர் கே.பாஸ்கர் கூறியதாவது: இந்திய வரலாற்றிலேயே பெரிய அளவில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது சென்னை ரயில்வே கோட்டத்தில்தான். இந்த 54 ரயில்களின் சேவைகளை மீண்டும் விரைவாக வழங்க வேண்டும். இதுதவிர, கரோனா ஊரடங்குக்கு முன்பு இயக்கப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் இயக்க வேண்டும்.

உதாரணமாக, சென்னை சென்ட்ரல் - அரக்கோணத்துக்கு மதியம் 1.15 மணிக்கு விரைவு பாதையில் மின்சார ரயில் இயக்கப்பட்டது. கரோனா ஊரடங்குக்கு பின்னர் இந்த ரயில் இயக்கப்படவில்லை. பயணிகளுக்கு மிகவும் பயனுள்ள இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். இதுதவிர, சென்னை சென்ட்ரல் - திருப்பதிக்கு 3 ரயில்கள் முறையே காலை 7.15, 9.50, இரவு 7.10 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்பட்டன. இவற்றில் காலை 9.50 மணிக்கு புறப்படும் ரயில் மட்டும் மீண்டும் இயக்கப்படுகிறது. மற்ற ரயில்களையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இவைகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, “பராமரிப்பு பணிக்காக, இந்த 54 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. அதுவும் இரவு நேரத்தில் மட்டும்தான் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டன. பயணிகளில் கோரிக்கையை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இந்த ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே உறுதி பூண்டுள்ளது” என்றனர்.