பழங்கால நாணயங்கள் முதல் வாகனங்கள் வரை... ஆச்சரியப்படுத்தும் வாலிபர்


பழங்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறையை அவர்கள் பயன்படுத்திய நாணயம், பொருட்கள் மூலம் அறிய முடியும். இவற்றை மியூசியங்களுக்கு சென்றால் காண இயலும். எனினும், மியூசியங்களுக்கு செல்லும் வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரிது. குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு பழங்கால நாணயம், பொருட்களை காண்பது அரிதினும், அரிது.

அந்தக் குறையை நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே ஆலாங்காட்டுவலசைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி வாலிபர் சி.தாமரைராஜ் (28) என்பவர் போக்கி வருகிறார். இந்தியா உள்பட 150 நாடுகளின் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றை சேகரித்து வைத்துள்ளார். அதுபோல் பழங்கால இரு சக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு அரிதான பொருட்களை சேகரித்து வைத்துள்ளார். அவற்றை சேகரிப்பது மட்டுமன்றி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று இலவசமாக கண்காட்சியும் நடத்தி விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

பொறியியல் பட்டதாரி வாலிபர் தாமரைராஜ்

இதுகுறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "அப்பா கே.சின்னதம்பி, விவசாயம் செய்து வருகிறார். அம்மா தனலட்சுமி வீட்டை பராமரிக்கிறார். தம்பி ஒருவர் உள்ளார். ராசிபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. சிவில் படித்தேன். 12-ம் வகுப்பு படிக்கும் சமயத்தில் வித்தியாசமான உருவங்கள் இடம் பெறும் நாணயங்களை சேகரிப்பேன். பெற்றோர், உறவினர்கள் செலவுக்காக வழங்கும் பணம், நாணயங்களில் வித்தியாசமான உருவங்கள், படங்கள் இருந்தால் அதை செலவு செய்யாமல் பத்திரமாக வைத்திருப்பேன். நாளடைவில் இந்த பழக்கம் பழங்கால நாணய சேகரிப்பின் மீது தனி ஆர்வத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தை ஆட்சி செய்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலம் மற்றும் அதற்கு முன்னதாக பயன்படுத்தப்பட்ட பண்டைய கால நாணயங்கள் முதற்கொண்டு சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆயிரம் ரூபாய் நாணயம் வரை சேகரித்து வைத்துள்ளேன்.

இதுபோல், நமது நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூபாய் பழங்கால ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளையும் சேகரித்து வைத்துள்ளேன். மொத்தம் 150 நாடுகளின் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் சேகரித்து வைத்துள்ளேன். இதில் பழங்கால நாணயங்கள் மட்டும் 1,000 கிலோ எடை இருக்கும். பழங்கால நாணயம், ரூபாய் நோட்டுகளை சேகரிப்புக்கு ஆங்கிலத்தில் நுமிஸ் மேட்டிக்ஸ் (Numis Matics) என்று பெயர். நாணயங்கள், ரூபாய் நோட்டுகளில் இடம் பெறும் உருவங்கள், படங்கள் நாட்டின் சிறப்புகளை உணர்த்தும். உதாரணமாக 5 ரூபாய் நாணயத்தின் பின்புறம் டிராக்டர் படம் இருக்கும். இது நமது விவசாயத்தை போற்றுவதற்காக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதுபோல், சமீபத்தில் வெளியான 1,000 ரூபாய் நாணயத்தில் தஞ்சை பெரியகோயிலின் படம் இடம் பெற்றிருக்கும்.

இது தஞ்சை பெரிய கோயில் கட்டி ஆயிரம் ஆண்டுகள் நிறைவுட பெற்றத்தை சிறப்பிப்பதற்காக வெளியிட்டது. இதில், இரு ஆயிரம் ரூபாய் நாணயங்களை வைத்துள்ளேன். இதுபோல், நாட்டின் தலைவர்கள், சுற்றுலாத் தளங்கள் உள்ளிட்டவை நாணயம், ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டு வெளியிடப்படும். 20 ரூபாய் நோட்டில் கேரளா கோவலம் கடற்கரை பீச் இடம் பெற்றிருக்கும்.

இந்த பீச் இந்தியாவில் உள்ள சுத்தமான, மிக அழகான பீச்சாகும். இதை சிறப்பிக்க பீச் படம் இடம் பெற்றிருக்கும். நாணயங்களில் சில மக்கள் புழக்கத்திற்கு வராது. ஏனெனில் இவை நாட்டின் சிறப்புகளை போற்றுவதற்காக வெளியிடப்படுகிறது. இந்த நாணயங்கள் வெள்ளியில் தயாரித்து வெளியிடப்படும். இந்தியாவில் மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய இடங்களில் நாணயங்கள் அச்சடிக்கப்படுகின்றன. இவை சிறப்பு நாணயங்கள் வெளியிடும்போது, அவற்றை விலை கொடுத்து வாங்கி சேகரிப்பில் வைப்பேன். அந்த வகையில் பழங்காலம் நாணயங்கள் தவிர, 5, 10, 75, 100, 125, 150, 10, 175, 200, 500 மற்றும் 1,000 ரூபாய் நாணயங்களை சேகரித்து வைத்துள்ளேன். இவை ஒவ்வொன்றும் பணம் செலுத்தி வாங்கி வைக்கப்பட்டது. இதுபோல், மலேசியா, சீனா, தாய்லாந்து, மங்கோலியா, ஆப்கானிஸ்தான் என பல்வேறு வெளிநாட்டு நாணயங்கள், பணத்தாள் சேகரித்து வைத்துள்ளேன்.

இவையெல்லாம் முகநுாலில் ஏற்பட்ட தொடர்புகள், கடிதப் போக்குவரத்து போன்றவற்றின் மூலம் சேகரிக்கப்பட்டவையாகும். பண்டமாற்று முறைபோல் என்னிடம் கூடுதலாக வைத்துள்ள சில நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை வழங்கி, பிற நாட்டு நாணயம், பணத்தாள்களை பெறுவேன். கடிதப் போக்குவரத்தின் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து எனக்கு அனுப்பப்பட்ட தபால்களை சேகரித்து வைத்துள்ளேன். இந்தியா உள்பட 120 நாடுகளில் பயன்படுத்தப்படும் மற்றும் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், பணத்தாள், அஞ்சல் அட்டை, அஞ்சல் தலை ஆகியவற்றை வைத்துள்ளேன். நாணய சேகரிப்பு மட்டுமின்றி அந்த காலத்தில் தீப்பெட்டி சேகரிப்பு, சோடா பாட்டில் மூடி சேகரிப்பும் ஒரு கலையாக இருந்தது. தீப்பெட்டி சேகரிப்புக்கு பிலிம்ணிஸ்ட், சோடா பாட்டில் மூடி சேகரிப்புக்கு க்ரெளன் கேப் கலெக் ஷன் (Crown cap collection) என்று பெயர். பல நாடுகளில் பல்வேறு வகையில் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டி, சோடா பாட்டில் மூடிகளும் வைத்துள்ளேன்.

நாணயங்களை வசதி படைத்தவர்கள் சேகரிக்க இயலும். எனினும், எளிய மக்களுக்கு நாணய சேகரிப்பு என்பது எட்டாக் கனியாகும். அவர்கள் தீப்பெட்டி, சோடா பாட்டில் மூடி போன்றவற்றை சேகரிப்பர். அந்த வகையில் நாணய சேகரிப்பு போல், தீப்பெட்டி, சோடா பாட்டில் மூடி சேகரிப்பும் ஒரு கலையாகும். இதுபோல், பழங்கால ரேடியோக்கள், ஆயுதங்கள், லாந்தர் லைட், தொலைபேசி, கடிகாரம், லாந்தர் லைட், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் சேகரித்து வைத்துள்ளேன். பழங்கால வாகனங்கள் அனைத்தும் சாலையில் ஓடும் நிலையில் வைத்துள்ளேன். மொத்தம் 12 பழங்கால இரு சக்கர வாகனங்கள் வைத்துள்ளேன்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் பயன்படுத்தப்பட்ட முத்திரைத்தாள் வைத்துள்ளேன். இந்த முத்திரைத்தாளில் குயின் விக்டோரியா மகாராணி, எட்வர்டு மகாராஜா ஆகியோர் படம் இடம் பெற்றிருக்கும். இந்திய சுதந்திரத்திற்கு முன் ஆங்கிலேய படையெடுப்பின்போது இருந்த மன்னர், மகாராணி படம் போன்றவையும் முத்திரைத்தாளில் இடம் பெற்றிருக்கும்.

இவை பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெற்றிருக்காது. மியூசியங்களுக்கு சென்றால் மட்டுமே காண முடியும். சேகரிக்கப்பட்ட பொருட்களை பாதுகாக்க இரு வீடுகளை வாடகைக்கு எடுத்து அவற்றை பாதுகாத்து வருகிறேன். இந்த பழங்கால பொருட்களைக் கொண்டு பள்ளி, கல்லுாரிகளில் கண்காட்சி நடத்துகிறேன். வெறும் கண்காட்சியாக மட்டுமின்றி அவற்றை மாணவர்கள் பார்வையிடும்போது நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் எந்த காலத்தில் அச்சடிக்கப்பட்டது. அவற்றின் வரலாறு ஆகியவற்றைக் விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். ஒவ்வொரு நாணயத்திற்கும் ஒரு வரலாறு உள்ளது.

இந்த வரலாறுகளை மாணவர்கள் அறிந்து கொள்வது, பாடங்களை தாண்டி அவர்களுக்கு ஒரு விசாலாமான பார்வையை ஏற்படுத்தும். இதுவரை பல்வேறு மாவட்டங்களில் 140 பள்ளி, கல்லூரிகளில் கண்காட்சிகள் நடத்தியுள்ளேன். முற்றிலும் இலவசமாகவே இவற்றை நடத்துகிறேன்.

கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்வதில்லை. கண்காட்சி நடத்தும்போது பள்ளி, கல்லுாரியின் சான்றிதழ் வழங்குவர். நான் தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். அந்த வருவாய் மூலம் இவற்றை வாங்குகிறேன். கண்காட்சி நடத்தும்போது சில கல்வி நிறுவனங்களில், வந்து போகும் வண்டி வாடகை வழங்குவர். இந்த வருவாய் மூலம் பழங்கால பொருட்களை வாங்குகிறேன். இப்பழங்கால பொருட்களை பழங்கால நாணயம், பழங்கால பொருட்கள் கண்காட்சிகளை தொடர்ச்சியாக நடத்தி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்பதே எனது நோக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா ஊரடங்கின்போது பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தன. அதனால் இரண்டு ஆண்டுகளாக நடத்த இயலவில்லை. தற்போது பள்ளி, கல்லூரி திறக்கப்பட்டதால் தொடர்ச்சியாக கண்காட்சி நடத்தி வருகிறேன். இதற்கு நான் பணிபுரியும் நிறுவனமும் ஒத்துழைப்பு வழங்குகிறது. பொதுவாக சொந்த காரணங்களுக்கு எதற்கும் விடுப்பு எடுப்பதில்லை. கண்காட்சி நடத்த மட்டுமே நிறுவனத்தின் அனுமதியுடன் விடுப்பு எடுப்பேன்" என்றார்.

x