இலங்கை மக்களுக்கு உதவ குழு அனுப்பி வைப்பு: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்


"இலங்கையில் தற்போதைய நிலை மிகவும் கடினமாக உள்ளதால், அவர்களுக்கு உதவ இலங்கைக்கு குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது'' என வாழும் கலை மையத்தின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் உள்பட 9 கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய வாழும் கலை மையத்தின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வாழும் கலை மையத்தின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பெங்களூரில் இருந்து திருச்செங்கோட்டிற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தார்.

சுவாமி தரிசனத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாபநாசத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வசதியாக கம்ப்யூட்டர் டிரெய்னிங் சென்டர் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 19 நதிகளின் நீர் இணைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெங்களூவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்செங்கோட்டிற்கு வந்த வாழும் கலை மையத்தின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

இலங்கையில் தற்போதைய நிலை மிகவும் கடினமாக உள்ளது. கவலை அளிப்பதாக உள்ளது. இலங்கையிலிருந்து தமிழகம் நோக்கி வரும் தமிழர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என நினைக்கிறோம். இதுகுறித்து கவனிக்க ஒரு குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.

முன்னதாக ஹெலிகாப்டர் வந்திறங்கிய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை தனியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.எஸ்.ரங்கசாமி, செயலாளர் சீனிவாசன், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.

x