8 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை பூங்கா நுழைவு, பார்க்கிங் கட்டணங்கள் உயர்வு


மேட்டூர்: மேட்டூர் அணை பூங்கா நுழைவு மற்றும் பார்க்கிங் கட்டணம் 8 ஆண்டுகளுக்கு பிறகு இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மேட்டூர் அணை பூங்கா உள்ளது. வார விடுமுறை, பண்டிகை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். கோடை விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது உண்டு. இதனிடையே, நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அணை பூங்கா நுழைவு கட்டணம் கடந்த 8 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில், அணை பூங்கா, பவள விழா கோபுரம் கட்டிடம் ஆகியவற்றை பார்வையிடுவதற்கான நுழைவு கட்டணத்தை உயர்த்த, அறிக்கை தயார் செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, பூங்கா நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், வளர்ச்சி பணிகளுக்காகவும் உயிரியல் பூங்காக்களின் நுழைவு கட்டணத்தை மாற்றியமைத்து, நீர்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மேட்டூர் அணை பூங்கா நுழைவு கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ. 10 ஆகவும், பவள விழா கோபுரத்தை படிக்கட்டு வழியாக பார்வையிட ரூ.5ல் இருந்து ரூ.10 ஆகவும், மின் தூக்கி வழியாக பார்வையிட ரூ.20ல் இருந்து ரூ.30 ஆகவும், மீன் அருங்காட்சியகம் நுழைவு கட்டணம் ரூ. 1ல் இருந்து ரூ. 5 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கேமரா நுழைவுக் கட்டணம் ரூ. 20ல் இருந்து ரூ 50ஆகவும், வீடியோ கேமரா கொண்டு செல்ல ரூ 250ல் இருந்து ரூ. 500 ஆகவும், கேமரா வசதியுடன் கூடிய கைப்பேசி கொண்டு செல்ல ரூ. 10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், அணை பூங்கா வாகனம் நிறுத்தும் இடத்தில், மிதிவண்டி நிறுத்த கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.10 ஆகவும், மாட்டு வண்டி நிறுத்த கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.10 ஆகவும், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் நிறுத்த கட்டணம் ரூ. 10ல் இருந்து ரூ. 20 ஆகவும், மினி பேருந்து நிறுத்த கட்டணம் ரூ. 20ல் இருந்து ரூ. 50 ஆகவும், பேருந்து, லாரி, நிறுத்த கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்திருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.