போலீஸ் கவுரவத்தை தூக்கிப் பிடிக்கும் படமானால் நடிப்பேன் - ஜாங்கிட்!


ஜாங்கிட்

இயக்குநர் ஷரவண சக்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘குலசாமி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் முன்னாள் டிஜிபி-யான எஸ்.ஆர். ஜாங்கிட், அதை தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்வான தருணமாகப் பகிர்ந்திருக்கிறார்.

பணியில் இருந்த காலத்தில் பொதுமக்கள் நலன் சார்ந்து மட்டுமல்லாமல் போலீஸார் நலன் சார்ந்தும் சிந்தித்தவர் ஐபிஎஸ் அதிகாரி ஜாங்கிட். வடமாநில கொள்ளையர்களை அவர்களின் ஏரியாவிலேயே போய் கைது செய்து அழைத்து வந்து தமிழக காவல் துறையை தலைநிமிர வைத்த பெருமையும் ஜாங்கிட்டுக்கு உண்டு. தனது சொந்த மாநிலமான ராஜஸ்தானைவிட தமிழகத்தை அதிகம் நேசிப்பவர் ஜாங்கிட். அதனால் தான் டிஜிபி-யாக பணி ஓய்வுபெற்றுவிட்ட பிறகும் தமிழகத்திலேயே தங்கிவிட்டார். இத்தனை பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த காக்கி மனிதருக்குள் சினிமா ஆசை துளிர்விட்டது எப்படி?

இந்தக் கேள்வியுடன் ஜாங்கிட்டை தொடர்பு கொண்டோம். பணியில் இருந்த காலத்து அதே உற்சாகத்துடம் பேச ஆரம்பித்தார்.

இத்தனை வயசுக்கு அப்புறம் என்ன சார் சினிமா ஆசை?

ஆசை எல்லாம் எதுவுமில்லீங்க... இந்தப் படம் சம்பந்தமா டைரக்டர் சரவணன் ஸ்டோரி டிஸ்கஷனுக்காக என்கிட்ட வந்திருந்தார். அப்ப அவரு தான் “இந்த ரோல் பண்றீங்களா சார்”னு என்கிட்ட கேட்டார். கதை நல்ல கதையா இருந்ததால நான் ஓகே சொல்லிட்டேன்.

இந்த படத்துல உங்களுக்கு என்ன ரோல்?

போலீஸ் அதிகாரி கேரக்டர் தான். ஆனா, ரொம்ப சின்ன ரோல் தான்.

படப்பிடிப்பெல்லாம் முடிஞ்சிருச்சா..?

ஓ... எல்லாம் முடிஞ்சு போஸ்ட் புரடெக்‌ஷன் போயிட்டு இருக்கு. படம் நல்லாவே வந்திருக்கு. அடுத்த மாசம் படம் ரிலீஸ் ஆகப்போகுது.

தொடர்ந்து சினிமாவில் நடிக்கிறதா பிளான் இருக்கா?

புரொபஷனலா பண்ணணும்னு திட்டம் இல்லை. போலீஸின் கவுரவத்தை தூக்கிப் பிடிக்கும் படமா இருந்தா பண்ணலாம்னு இருக்கேன். அதிலும் நிகழ் சம்பவங்களின் உண்மையைப் பேசும் படமா இருந்தா நிச்சயம் தட்டமாட்டேன். போலீஸ் கதைகள் சம்பந்தமா நண்பர்கள் சிலர் டிஸ்கஷனுக்கு வருவாங்க. இப்பக்கூட ஒரு கதை டிஸ்கஷன்ல இருக்கு. அது யாருன்னு இப்ப சொல்ல வேணாம்னு நினைக்கிறேன். இந்தப் படத்துலயும் என்னை நடிக்கச் சொல்லிட்டு இருக்காங்க. எனக்குப் பிடிச்சிருந்தா நிச்சயம் நடிப்பேன்.

சொந்த ஊரை மறந்து சென்னையிலேயே செட்டில் ஆகிட்டீங்களே..?

சென்னை எனக்கு ரொம்பவே பிடிச்ச ஊர். அதனால மணப்பாக்கத்துல இருக்கேன். அதுக்காக சொந்த ஊரை மறக்கல, சொந்தபந்தங்கள எப்படி மறக்கமுடியும்? அதனால அப்பப்ப ராஜ்ஸ்தானுக்கு போய் வந்துட்டு இருக்கேன்.

இவ்வாறு நமக்கு பேட்டியளித்தார் ஜாங்கிட்.

x