கரூர் - திருமாநிலையூரை இணைக்கும் அமராவதி ஆற்றுப் பாலத்துக்கு 101 வயது!


கரூர்: கரூர் நகரம் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அமராவதியின் வடகரையில் அமைந்துள்ள கரூர் நகருக்கு தெற்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து வருபவர்கள் அமராவதி ஆற்றுப் பாலத்தைக் கடந்துதான் நகருக்குள் வரமுடியும். இப்பாலம் கட்டப்படுவதற்கு முன்பு வரை அமராவதி ஆற்றில் இறங்கி மக்கள் கரூருக்கு வந்துக் கொண்டிருந்தனர். இதற்காக அமராவதி ஆற்றில் ஆழம் குறைவான பகுதிகளில் அடையாளமிடப்பட்டிருந்தன.

பிரிட்டிஷார் கரி இஞ்ஜின் பேருந்துகளை இயங்க தொடங்கிய போது, தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்து கரூர் நகருக்குள் வரமுடியாத நிலை இருந்தது. இதனால் அமராவதி ஆற்றின் தென் கரையில் திருமாநிலையூரில் இருந்து கரூர் நகருக்குள் வருவதற்கு பாலம் கட்ட ஏற்பாடானது. இதற்காக 105 ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணித் துறை மூலம் அமராவதி (பழைய) பாலம் கட்ட 1919-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி திவான் பகதூர் பி.ராஜகோபால ஆச்சாரியார் அடிக்கல் நாட்டினார். பாலத்தின் கட்டுமான பணிகள் 5 ஆண்டுகள் நடைபெற்றன. அடிக்கல் நாட்டப்பட்ட அதே ஜூன் மாதத்தில் 5 ஆண்டுகள் கழித்து 10 நாட்களுக்கு முன்னதாகவே 1924-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி அமராவதி ஆற்றின் தற்போதைய பழைய பாலம், 24 தூண்கள், 350 மீட்டர் நீளம், 5.5 மீட்டர் அகலம் கொண்ட ஆர்ச் பாலமாக திறக்கப்பட்டது.

இந்தப் பாலத்துக்கு அப்போதைய திருச்சிராப்பள்ளி ஜில்லா போர்டு தலைவர் டீ.தேசிகாச்சாரி பெயர் சூட்டப்பட்டு, அப்போதைய சென்னை கவர்னர் விஸ்கவுன்ட் கோஸ்சென் ஹாக்ஹர்ஸ்ட் பாலத்தைத் திறந்து வைத்தார். திருச்சிராப்பள்ளி ஜில்லா போர்டு பொறியாளர் இ.எம்.டி. மெல்லோ மேற்பார்வையில் ஒப்பந்ததாரர்கள் அய்யாசாமி பிள்ளை மற்றும் ஜெகதீச அய்யர் பாலப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

வாகனங்கள் அதிகரித்து போக்குவரத்து அதிகரித்து நிலையில் பாலத்தின் ஒரு பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஒரு வழித் தடமாக எதிர்புற வாகனங்கள் வர அனுமதிக்கப்படும். அதன் பிறகு எதிர்பகுதியில் உள்ள வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு மற்றொரு பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படும். கடந்த 1977-ல் அமராவதி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை தாங்கிய இப்பாலம், 75 ஆண்டுகளை கடந்த நிலையில் வலுவிழந்த நிலைக்குப் போனது. இதனால் 25 ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பாலத்தில் கனரக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

இதனால் இப்பாலத்தின் மேற்குப் பகுதியில் புதிய பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. 2005-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் அமராவதி புதிய பாலத்தின் அணுகு சாலை இடிந்த போதும், 2007-ல் புதிய பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் பழைய பாலம் தான் போக்குவரத்துக்கு (கனரக வாகனங்கள் நீங்கலாக) கைகொடுத்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழைய பாலத்தில் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் பாதசாரிகளும் இரு சக்கர, 3 சக்கர வாகன ஓட்டிகளும் இப்பாலத்தை பயன்படுத்தி வந்தனர். பழைய பாலத்திற்கு அருகிலே புதிய பாலம், பசுபதிபாளையம் தரை பாலம் (தற்போது உயர்மட்ட பாலம் கட்ட இடிக்கப்பட்டு விட்டது), புறவழிச்சாலையில் அமராவதி ஆற்றில் இரு பாலங்கள் என வந்துவிட்டப்போதும் அமராவதி ஆற்றில் கரூரில் முதலில் கட்டப்பட்ட பாலம் இதுதான்.

கடந்த 2019-ல் அமராவதி பழைய பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு தனியார் வங்கி பங்களிப்புடன் வாக் அண்ட் ஜாக் என்ற பெயரில் நடைப் பயிற்சி பூங்காவாக 2020-ல் மாற்றப்பட்டு விட்டது. இதற்காக அப்பகுதியில் இருந்த பாலம் குறித்த கல்வெட்டுகளும் இடித்து அகற்றப் பட்டு விட்டன. நூற்றாண்டை கடந்துள்ள இப்பாலத்தை நினைவு கூரும் விதமாகவும், அதன் வரலாற்றை மக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும், அகற்றப்பட்ட கல்வெட்டுகளை இப்பகுதியில் நிறுவவேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.