கொடைக்கானல் மலைப் பகுதிக்கு வலசை வரும் பட்டாம்பூச்சிகள்!


ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாண்டிக்குடி செல்லும் மலைப் பகுதிக்கு வந்த ஃபுளூ டைகர் பட்டாம்பூச்சி.  படம்: நா.தங்கரத்தினம்.

ஒட்டன்சத்திரம்: கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலைப் பகுதிக்கு வெளிமாநிலங்களில் இருந்து பட்டாம் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக வலசை வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. இதனால் சிறுமலை, கொடைக்கானல் மேல்மலைகள் மற்றும் கீழ்மலைக் கிராமங்களான தாண்டிக்குடி, பாச்சலூர், ஆடலூர் உள்ளிட்ட மலைப் பகுதியில் கோடை காலத்தில் காய்ந்து பட்டுப்போன தாவரங்கள், மரங்கள் தளிர்த்து வருகின்றன. தற்போது, மலைப் பகுதி முழுவதும் பசுமை நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்தும் உணவு, தண்ணீருக்காக பட்டாம்பூச்சிகள் கொடைக் கானலுக்கு வலசை வரு கின்றன.

ஒட்டன்சத்திரத்தில் வட காடு, பாச்சலூர் வழியாக தாண்டிக்குடி, பழநியிலிருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் பல வண் ணங்களில் பட்டாம் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக பறக்கின்றன. சாலையோரம் மணல், கற்களில் இருக்கும் உப்பை சுவைக்கவும், தண்ணீருக்காகவும் வரிசைக்கட்டி நிற்கின்றன. இயற்கையின் கொடையாக விளங்கும் கொடைக்கானல் மலைப் பகுதி பட்டாம்பூச்சிகளின் வாழ்விடமாகவும் அமைந்துள்ளது. தமிழகத்தில் பிற இடங்களில் பார்க்க முடியாத பட்டாம்பூச்சிகளை கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் அதிகமாக பார்க்கலாம்.

தற்போது மலைப் பகுதிகள், மலையடிவாரம் மற்றும் வனப்பகுதியில் காலை 8 முதல் 10 மணி வரை ஃபுளு டைகர், காமன் குரோ ( வெண்புள்ளி கருப்பன் ) உட்பட பல வகையான பட்டாம்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதை பார்க்க முடிகிறது. வனத்துறை சார்பில் தாண்டிக்குடியில் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கும் திட்டம் அறிவிப்போடு நிற்கிறது. இதேபோல், திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலையிலும் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பட்டாம்பூச்சிகளை பாதுகாப்பதோடு, அவற்றின் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம்.

இது குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேராசிரியர் சித்ரா கூறியதாவது: தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன. அதில் சில வகை பட்டாம்பூச்சிகள் மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலத்துக்கு வலசை ( இடப் பெயர்ச்சி ) செல்லும். ஒரு தலைமுறையாக வலசை செல்லும் பட்டாம் பூச்சிகள் வலசையின் முடிவில் 3 தலைமுறைகளாக அவற்றின் சொந்த இடத்துக்கு திரும்பும். பட்டாம் பூச்சிகளின் எல்லை எது, எங்கு செல்கின்றன என்பது இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. பொதுவாக காலநிலை மாற்றம், உணவு மற்றும் இனப்பெருக்கத்துக்காக பட்டாம்பூச்சிகள் வலசை செல்வதாகக் கூறப் படுகிறது.

குறிப்பாக ஃபுளு டைகர் வகை பட்டாம் பூச்சிகள் அதிக அளவில் வலசை செல்லும். ஒரு பட்டாம்பூச்சி 3,000 கி.மீ. தூரம் வரை வலசை செல்லும். கொடைக்கானல், தாண்டிக்குடி, தடியன்குடிசை பகுதியில் அதிக அளவில் பட்டாம்பூச்சிகளை பார்க்கலாம் என்று கூறினார்.

x