பழநி முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு ஆர்வம் காட்டாத பக்தர்கள் - 22 நாட்களில் 196 பேர் மட்டுமே பதிவு


பிரதிநிதித்துவப் படம்

பழநி: பழநியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆக. 24, 25-ம் தேதிகளில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க பக்தர்களிடையே ஆர்வமில்லை. நேற்று வரை 196 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆக.24, 25-ம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சமய பெரியோர்கள், ஆன்மிக அன்பர்கள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டுக்காக வரும் சிறப்பு அழைப்பாளர்கள்,

வெளி நாட்டு பக்தர்களை தங்க வைப்பதற்காக திண்டுக்கல் மற்றும் பழநியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள், கோயிலுக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளில் உள்ள அனைத்து அறைகளும் ஆக. 23 முதல் ஆக. 26-ம் தேதி வரை முன்பதிவுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புவோருக்கு https://muthamizhmuruganmaanadu2024.com என்ற தனி வலைதளம் கடந்த மே 28-ம் தேதி தொடங்கப்பட்டு, தற்போது பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

மாநாட்டில் பங்கேற்க விரும்பும் உள்நாட்டினருக்கு ரூ.500, வெளி நாட்டினருக்கு ரூ.1,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து முருக பக்தர்கள் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாக கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பங்கேற்பாளர்கள் (பதிவு செய்தவர்கள்) மற்றும் முக்கிய பிரமுகர்களை தவிர மாநாட்டை காண வரும் முருக பக்தர்களுக்கு தனியே அரங்கம் அமைக்கப்பட உள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்கு கட்டணம் வசூலிக்கும் முறை பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாநாட்டுக்கான பதிவுகள் தொடங்கி 22 நாட்கள் ஆன நிலையில் நேற்று (ஜூன் 19) வரை உள்நாட்டினர் 178 பேர், வெளிநாட்டினர் 18 பேர் என மொத்தம் 196 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மாநாட்டில் பங்கேற்க ஜூலை 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், ஆய்வுக்கட்டுரைகளை ஜூன் 30-ம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

x