மக்களின் தேவையைப் புரிந்துகொள்ளும் திறனும், அதற்கான தீர்வை அளிக்கும் அறிவும் கொண்ட ஒரு சிறு குழு திட்டங்களை வடிவமைப்பதற்குப் போதுமானது. ஆனால், அவற்றைச் செயல்படுத்துவதற்கு எண்ணற்ற மனிதர்களின் உழைப்பு தேவை. அந்த உழைப்பு அரசு அமைப்பின் கடைநிலையிலிருக்கும் ஊழியர்களிடம் இருந்தே பெருமளவு பெறப்படுகிறது. குறிப்பாக, அங்கன்வாடி பணியாளர்களிடமிருந்து. இன்றைய தேதியில் இந்தியாவில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்களும், உதவியாளர்களும் இருக்கின்றனர். அவர்களில் 20,518 பேர் டெல்லியில் பணியாற்றுகின்றனர்.
சுகாதாரத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் வெற்றி அனைத்தும் மக்களுடன் இணைந்து பயணிக்கும் இந்த அங்கன்வாடி பணியாளர்களின் உழைப்பையும், சலிப்பற்ற களப்பணியையும் சார்ந்தே இருக்கின்றன. எனினும், அவர்களுக்குக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது; சமூகப் பாதுகாப்பும் கிடைப்பதில்லை. இருப்பினும், அவர்கள் தினமும் அதிக நேரம் சலிப்பின்றி வேலை செய்கிறார்கள்; உடல்நலம் சார்ந்த முக்கியமான முன்னெடுப்புகளையும், ஊட்டச்சத்துத் திட்டங்களையும் செயல்படுத்துகிறார்கள். கோவிட்19 தொற்றிலிருந்து மக்களைக் காக்க தங்கள் உயிரையும் பணயம் வைக்கிறார்கள்.
அடிப்படையில், அங்கன்வாடி பணியாளர்களும், உதவியாளர்களும் அரசு ஊழியர்களாகக் கருதப்படுவது இல்லை. அவர்கள் தன்னார்வத் தொண்டர்களாகவே கருதப்படுகின்றனர். இதன் காரணமாக, மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி போன்ற பாதுகாப்பு அம்சங்களும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அவர்களின் சம்பளம்கூட ‘கவுரவ ஊதியம்’ என்றே குறிப்பிடப்படுகிறது. குறைவான ஊதியம் ஏற்படுத்தும் பொருளாதார நெருக்கடியும், பணிப் பாதுகாப்பின்மையும் இன்றைய பெருந்தொற்று காலத்தில் அவர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கி விட்டன.
இந்தச் சூழலில், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையையும், ஊதியத்தையும் கேட்டு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இல்லத்துக்கு அருகே அவர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஜனவரி 31-ம் தேதி முதல் அவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளனர். ஓய்வூதியப் பலன்கள், மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை அவர்களின் முக்கியக் கோரிக்கைகள்.
இதற்கு முன்பாகவே, தங்கள் நிலையை அறிவிக்கும் விதமாக, அவர்கள் இரண்டுமுறை எச்சரிக்கைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல் போராட்டம் 2021 செப்டம்பர் 7அன்றும், இரண்டாவது 2022 ஜனவரி 6 அன்றும் நடைபெற்றது. ஆனால், அரசு அவர்களையும் கண்டுகொள்ளவில்லை; அவர்களின் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கவில்லை. இந்நிலையில்தான், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தற்போது அவர்கள் குதித்துள்ளனர்.
42 வயதான அவந்திகா கிரி, 14 ஆண்டுகளுக்கு மேலாக, கிழக்கு டெல்லியில் அங்கன்வாடி பணியாளர். அவருடைய இன்றைய ஊதியம் 9,709 ரூபாய் மட்டுமே. கரோனா இரண்டாவது அலையின்போது, அப்பகுதியில் வசித்துவரும் குழந்தைகளை வழக்கமான தடுப்பூசிகளுக்காக அழைத்துவரச் செய்வதற்காக, ஒவ்வொரு குழந்தையின் வீட்டுக்கும் நான்கு முறை அவர் செல்ல வேண்டியிருந்தது. அப்போது அவர் தனது சொந்த செலவில்தான் பேருந்துகளில் பயணம் செய்தார். அவருடைய வேலை நேரம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை. இருப்பினும், அவர் பெருந்தொற்று காலத்தில் அவர் மாலை 5 மணிக்கு முன்பாக வீட்டுக்குச் சென்றதே இல்லை. அவருடைய குழந்தையை கவனித்துக்கொள்ள வீட்டில் ஆளில்லை என்பதால், சில சமயங்களில் பணிக்குச் செல்லும்போது, குழந்தையையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார். அவர் செல்லும் சில வீடுகளில் கோவிட் நோயாளிகள் இருப்பது தெரிந்தபோதும், வேறு வழியில்லாமல் அப்போதும் குழந்தையைத் தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.
கர்ப்பிணிகளையும், குழந்தைகளையும் அவர்களின் வீட்டுக்கே சென்று பார்ப்பது, அவர்களின் உணவு முறைகளைக் கண்காணிப்பது, எடையைக் கவனிப்பது, அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து மருந்துகளை அளிப்பது, அவர்கள் தடுப்பூசிகள் பெறுவதை உறுதிசெய்வது போன்ற பணிகளுக்குப் பெரும்பான்மையான பணியாளர்கள் நடந்தே செல்கின்றனர். அதற்கான போக்குவரத்துச் செலவும் அவர்களுடையதாகவே இருக்கிறது.
இது போதாதென்று, அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பொம்மைகளை உருவாக்கும் பொறுப்பும் அவர்களுடையதாகவே இருக்கிறது. முக்கியமாக, பெருந்தொற்றின்போது, மக்களுக்கு நியாயவிலைக் கடை பொருட்களை விநியோகிக்கும் கூடுதல் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதையும் அவர்கள் மறுக்காமல் செய்தார்கள்.
போலியோ, பிசிஜி, வைட்டமின் ஏ குறைபாடு, இரும்புச் சத்து பற்றாக்குறை, தற்போது கோவிட்-19 உள்ளிட்ட எதுவாக இருந்தாலும், அதற்கான சிகிச்சைகளுக்காகவும், தடுப்பூசிகளுக்காகவும், குழந்தைகளையும் பெரியவர்களையும் சாமர்த்தியமாகப் பேசி அழைத்துச் செல்ல வேண்டிய பெரும் பொறுப்பை அங்கன்வாடி ஊழியர்கள் அயர்ச்சியின்றித் தொடர்ந்து நிறைவேற்றிவருகிறார்கள். கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோரின் நலனையும் ஊட்டத்தையும் கண்காணிப்பதே அவர்களின் முக்கியப் பணி. இருப்பினும், போலியோ சொட்டுமருந்து வழங்கும் பணிகளிலும் அவர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர். தடுப்பூசி மையங்களுக்குப் பெண்களையும் குழந்தைகளையும் அவர்களே நேரில் அழைத்துச் செல்கின்றனர். அங்கன்வாடி பணியாளர்களின் உழைப்பின் மூலமே குழந்தைகளுக்குத் தடுப்பூசி வழங்கப்படுகிறது; தாய்மார்களுக்கும் மூன்று டெட்டனஸ் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன; அவர்களின் கர்ப்ப காலம் முழுவதும் ஊட்டச்சத்து ஆதரவும் அளிக்கப்படுகிறது.
பிப்ரவரி 24 அன்று, டெல்லி அரசு அங்கன்வாடி பணியாளர்களுக்குக் கூடுதலாக 3 ஆயிரம் ரூபாய், உதவியாளர்களுக்குக் கூடுதலாக 1,500 ரூபாய் என ஊதியத்தை உயர்த்தியது. நாட்டிலேயே இதுதான் அதிக ஊதியம் என்றும் அது தெரிவித்தது. தற்போதைய உயர்வு அமலுக்கு வந்தாலும், டெல்லியில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஊதியம் 12,720 ரூபாய் என்ற மட்டில்தான் இருக்கும். இந்த ஊதிய உயர்வு தங்களுக்குப் போதுமானது இல்லை; ஏற்புடையதும் இல்லை என்று அதை ஏற்றுக்கொள்ள அவர்கள் மறுத்துவிட்டார்கள்.
அரசின் கடமை
‘டெல்லி அரசும், மத்திய அரசும் எங்களை மலிவு உழைப்பின் ஆதாரமாகக் கருதுகின்றன. அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, தொழிலாளர்களின் ஊதியத்தை 25 ஆயிரம் ரூபாயாகவும், உதவியாளர்களின் ஊதியத்தை 20 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்த வேண்டும் எனும் எங்கள் கோரிக்கை நியாயமானதுதானே?’ என்று அவர்களின் வேலைநிறுத்த துண்டுப் பிரசுரம் கேட்கிறது. இந்தப் போராட்டம் அவர்களின் அவலநிலையை மக்களிடம் எடுத்துச்செல்லும், அதன் மூலம் தங்கள் குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்கிற நம்பிக்கையை அந்தக் கேள்வி பிரதிபலிக்கிறது. அந்த நம்பிக்கையை மெய்ப்பிக்க வேண்டியது அரசின் கடமை.
அதற்கு, அரசாங்கம் அவர்களை முதலில் சந்திக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் கோரிக்கைகளில் இருக்கும் நியாயமும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியும் அரசுக்குப் புரியும். எத்தனையோ அரசு அலுவலகங்களில், வேலையே ஒதுக்கப்படாமல், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உயிரைப் பணயம் வைத்து, நேரம் காலம் பாராமல் சேவையாற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு எப்படி மறுதலிக்க முடியும்? சுகாதார அமைப்பின் அடித்தளமாக விளங்கும் அங்கன்வாடி பணியாளர்களின் நலனைப் புறக்கணிப்பது, தேசத்தின் நலனைப் புறக்கணிப்பதற்கு ஒப்பானது அல்லவா!