சாதிக்க வயது தடையில்லை என்பதை உறுதி செய்துள்ளார் திருச்செங்கோட்டைச் சேர்ந்த நான்கரை வயது சிறுமி ஸ்ரீநிகா.
திருச்செங்கோடு மலைக்காவலர் கோயில் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் கார்த்திக்பாண்டி. இவரது மனைவி மோனிகா. இவர்களது நான்கரை வயது மகள் கே.எம்.ஸ்ரீநிகா திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எல்கேஜி படித்து வருகிறார்.
இச்சிறுமி 60 தமிழ் வருடங்கள் பெயர்களை 27 நொடிகளில் தங்கு தடையின்றி சொல்லி ஆசியா புக் ஆப் ரெக்கார்டு, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், கலாம் வோர்ல்டு ரெக்கார்ட் ஆகிய புத்தகங்களில் இடம் பிடித்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் மோனிகா கூறுகையில், "கரோனா காலத்தில் வீட்டில் இருந்தபோது குழந்தைக்கு ஏதாவது பயிற்சி கொடுக்க வேண்டுமே என்பதற்காக விளையாட்டாக தமிழ் வருடங்களின் பெயர் சொல்வோம். அதை உன்னிப்பாக கவனித்து வந்த ஸ்ரீநிகா, அதை திருப்பி சொல்ல தொடங்கினார். இதனை கண்டு மேலும் பயிற்சி கொடுத்து வேகமாக சொல்ல வைத்தோம். அதனை பதிவு செய்து நாங்கள் உலக ரெக்கார்டு புத்தகங்களுக்கு தகவல் கொடுத்தோம்.
அவர்கள் அதை பதிவு செய்யச் சொல்லி அனுப்பு சொல்லியிருந்தனர். அதன்படி 27 நொடிகளில் அறுபது வருடங்களின் பெயர்களை மிக வேகமாக சொன்னதை பதிவு செய்து உலக சாதனை புத்தகங்களுக்கு அனுப்பி வைத்திருந்தோம். அதனை பாராட்டி சான்றுகளும் பதக்கங்களும் வழங்கியுள்ளனர். தற்போது ஸ்ரீநிகா திருக்குறள் மனப்பாடம் செய்து வருகிறார். ஸ்ரீநிகாவின் இந்த நினைவாற்றல் மகிழ்விக்கிறது. விளையாட்டாக கற்றுக் கொடுத்தால் அதை குழந்தைகள் எளிதாக கற்றுக்கொள்வர் என்பது இதன்மூலம் உணர முடிகிறது" என்றார்.
சிறுமியின் சாதனை தொடர வாழ்த்துகள்.