ஒரு குடும்பத்தின், ஒரு சமூகத்தின், ஒரு நாட்டின் மொத்த ஒழுக்கமும் புனிதமும் பெண்களின் உடலில்தான் இருக்கின்றன எனக் காலம் காலமாகக் கட்டமைக்கப்பட்டுவருகிறது. அதனால்தான், ஒழுக்கமீறலாக இந்தச் சமூகம் கருதும் அத்தனை நிகழ்வுகளிலும் பெண்ணுடலே சிதைக்கப்படுகிறது. போர்களில் தோற்றுப்போகும் நாட்டைச் சேர்ந்த பெண்களை வல்லுறவுக்கு ஆளாக்கிய கொடூரத்தின் எச்சமாக, இப்போதும் நம் சமூகத்தில் பெண்கள் மீதான தாக்குதல்கள் நடந்தவண்ணம்தான் இருக்கின்றன. இதில், பாலினப் பாகுபாடு மட்டுமல்ல, கும்பல் மனநிலையும் பேசப்பட வேண்டிய விஷயம்.
கடந்த ஜனவரி மாதம் இந்தியக் குடியரசு நாள் கொண்டாட்டத்தில் நாடே திளைத்திருக்க, இவ்வளவு ஆண்டுகள் நாம் கடந்து வந்தவை நாகரிகப் பாதைகள்தானா என்கிற கேள்வியை எழுப்பியது தலைநகர் டெல்லியில் நடந்த கொடூரம். அந்தச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வுகள் இன்றுவரை குறையவில்லை. இளம்பெண் ஒருவர் தலைமுடி கத்தரிக்கப்பட்டு, முகத்தில் கறுப்புச் சாயம் பூசப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, ஊர் மக்கள் மத்தியில் ஒரு கூட்டத்தால் அடித்து இழுத்துவரப்பட்ட காணொலி வெளியானது. பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில், டெல்லி காவல் துறை விசாரணையில் இறங்கியது.
பெண்ணை வதைக்கச்செய்த பெண்கள்
டெல்லியில் வசிக்கும் அந்தப் பெண் திருமணமானவர். இரண்டரை வயதில் குழந்தை இருக்கிறது. ஜனவரி 26-ம் தேதி என்ன நடந்தது என்பதை, அந்தப் பெண்ணின் தங்கைதான் ஊடகங்களில் வெளிப்படுத்தினார். அன்று காலை கோதுமையை எடுத்துக்கொண்டு தன் அக்கா வீட்டுக்குச் சென்றிருக்கிறார். “என்னைப் பார்க்க அக்கா கீழே வந்தார். அப்போது திடீரென்று சிலர் அவளைத் தாக்கத் தொடங்கினார்கள். அக்கா தன் கையில் குழந்தையை வைத்திருந்தாள். என்னால் அந்தக் கூட்டத்திடமிருந்து என் அக்காவைக் காப்பாற்ற முடியவில்லை. அவள் கையில் இருந்த குழந்தையை மட்டும் எப்படியோ மீட்டுவிட்டேன். பிறகு அக்காவை அடித்து, இழுத்து ஒரு ஆட்டோவில் ஏற்றினார்கள்” என்று தன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் அந்தப் பெண்ணின் தங்கை.
அந்தப் பெண்ணை அவருடைய பிறந்த வீடு இருக்கும் கஸ்தூர்பா நகருக்குக் கொண்டுச் சென்ற அந்தக் கும்பல், அங்கே அவரை அடித்துத் துன்புறுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது. ஓர் அறையில் அடைத்துவைத்து மூவர் தன்னை வல்லுறவுக்கு ஆளாக்கியதாகவும் அதைச் சில பெண்கள் ஊக்குவித்ததோடு, தன்னிடம் இன்னும் மூர்க்கத்துடன் நடந்துகொள்ளும்படிச் சொன்னதாகவும் டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மலிவாலிடம் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
குறையாத பெண் வெறுப்பு
அந்த வழக்கில் இதுவரை 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது, பெண்களுக்குள் நிறைந்திருக்கும் ஆணாதிக்கச் சிந்தனையைக் காட்டுகிறது. 'தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டதற்கு அந்தப் பெண்தான் காரணம்' என அந்தக் கும்பல் குற்றம்சாட்டியது. பெண்ணுக்கு எதிராகப் பெண்ணையே நிறுத்துவதன்மூலம், பெண்களைத் தங்கள் அடிமையாக வைத்துக்கொள்வதற்காக ஆணாதிக்கச் சமூகம் திட்டமிட்டுச் செய்துவைத்திருக்கும் ஏற்பாடுதான் இது. இதை அறியாமல், பெண்களும் ஆணாதிக்கத்தைச் செயல்படுத்துகிறார்கள். பெண்ணுக்கு எதிராகச் சமூகம் கட்டமைத்துவைத்திருக்கும் கற்பிதங்களைப் பெண்கள் கேள்விக்குள்ளாக்கும்போதெல்லாம், பெண்கள் பெருங்கொடுமைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
“பெண்ணை இப்படிப் பொதுவெளியில் அவமானப்படுத்தித் துன்புறுத்துவது, நம் சமூகத்துக்குப் புதிதல்ல. பெண்கள் பலரை ஊரார் முன்னிலையில் கதறியழச் செய்து காலில் விழவைத்த ‘பெருமித’ வரலாறு நமக்கு உண்டு. நம் ஆழ்மனதில் உறைந்திருக்கும் ஆதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடுதான் இப்படியான கொடூர நிகழ்வுகள். அதிலும் பெண்களே இதுபோன்ற தண்டனைகளைக் கையில் எடுப்பதுதான் வேதனையானது” என்கிறார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.சுகந்தி.
ஆணுக்கு இல்லையா கற்பு?
“அந்தப் பெண் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றத்தை ஆண் ஒருவர் செய்வதாக வைத்துக்கொள்வோம். என்ன நடந்திருக்கும்? இப்படியொரு சம்பவம் நடந்த தடயம்கூடத் தெரியாமல் போயிருக்கும். காரணம், கற்பு, ஒழுக்கம் போன்றவை ஆணுக்குத் தேவையில்லை என்றுதானே மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது? பெண் மட்டும் எப்போதும் தன்னை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்று சொல்லும் சுகந்தி, காவல் துறையினரிடம் வெளிப்படுகிற பெண் வெறுப்பையும் மெத்தனத்தையும் சுட்டிக்காட்டுகிறார்.
“பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் இப்படி யாராவது ஒருவர் காணொலி எடுத்து வெளியிட வேண்டும், பெண்ணிய அமைப்புகள் போராட வேண்டும். அதற்குப் பிறகுதான் வழக்குப் பதிவார்கள். பகுத்தறிவும் முற்போக்குச் சிந்தனையுமற்ற மனநிலையுடன்தான் பெரும்பாலான காவலர்கள் இதுபோன்ற வழக்குகளைக் கையாள்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தை குறித்தே கவனப்படுத்துவார்கள். அப்படிச் செய்வதன்மூலம் இது அந்தப் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனைதான் என்று மறைமுகமாக உணர்த்துவார்கள்” என்கிறார் சுகந்தி.
பெண்களின் வழியாகச் செயல்படுத்தப்படும் ஆணாதிக்கம் பற்றிக் குறிப்பிடும் அவர், “ஆணாதிக்கச் சமூகம் வகுத்துவைத்திருக்கும் அவ்வளவு கற்பிதங்களையும் தன்னையறியாமலேயே ஏற்றுக்கொண்டு வாழும் பெண்கள், அந்தச் சுமையை இன்னொரு பெண் மேல் ஏற்றிவைக்கிறார்கள். உறவு சார்ந்த பிறழ்வுகளில் ஈடுபடுகிற பெண்ணைத் தண்டிப்பதன் மூலம், தங்கள் கற்பை நிரூபிக்கும் உத்தியாகவும் பெண்கள் இதைச் செயல்படுத்துகிறார்கள். சக பெண்ணைக் குற்றவாளியாக்கித் தன்னை நிரூபிக்கும் மனநிலைதான் இது” என்று சொல்லும் சுகந்தி, பாலினப் பாகுபாட்டைக் களைந்து ஆண் - பெண் சமநிலையை அடைய நாம் செல்ல வேண்டிய தொலைவு அதிகம் என்பதையும் அழுத்தமாகப் பதிவுசெய்தார்.
கும்பல் மனநிலையின் கோரமுகம்
இப்படியான குற்றங்களில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு அம்சம், குற்றத்தில் ஈடுபடும் மக்கள் கூட்டம். தனியாக ஒரு குற்றத்தைச் செய்யத் தயங்குகிறவர்கள்கூடக் கூட்டமாகச் சேரும்போது, நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்குக் கொடூரச் செயல்கள் செய்யத் துணிகிறார்கள். வட இந்தியாவில் சில பகுதிகளில் நடைபெற்ற ‘கும்பல் வன்முறை’களிலும் இதை நாம் உணரலாம். அண்மையில், கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த மாணவியைப் பலர் கும்பலாகச் சூழ்ந்து கோஷங்களை எழுப்பியதும் இதுபோன்ற கும்பல் மனநிலைதான். “கும்பல் வன்முறையில் ஈடுபடுகிறவர்கள் தனித்த கூட்டமல்ல; அவர்களும் நம்மிடையே இருக்கிறவர்கள்தான்” என்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த மனநல மருத்துவர் குருமூர்த்தி.
“கும்பல் என்பதே எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதுதான். ஒருவர் தனி மனிதராக இருக்கும்போது அவருக்கென்று சில எல்லைகளையும் கட்டுப்பாடுகளையும் வைத்திருப்பார். ஆனால், கும்பலில் ஒருவராக மாறும்போது அதெல்லாம் மறைந்துவிடும். கும்பலாகச் செயல்படும்போது எதற்கும் பொறுப்பேற்கத் தேவையில்லை, தனித்து அடையாளப்படுத்தப்படும் சிக்கல் இல்லை. தனிநபர் தன்மை மறைந்து, கும்பலின் பெரும்பான்மை மனநிலையைப் பொறுத்தே மற்றவரின் செயல்பாடு இருக்கும்” என்று சொல்லும் குருமூர்த்தி, "கும்பல் வன்முறைக்குத் தனித்த காரணங்கள் இல்லை" என்கிறார்.
இரையாக்கப்படும் விளிம்புநிலை மக்கள்
“இதெல்லாம் திடீரென்று ஒரே நாளில் ஏற்பட்டுவிடுவதல்ல. தொடர் நிகழ்வுகளின் விளைவு இப்படித்தான் வெளிப்படும். சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார காரணிகளே கும்பல் வன்முறையை அதிகரிக்கின்றன. ஏதோ ஒரு விதத்தில் அதிருப்தியில் இருப்பவர்களைத் தனிநபர்களோ அமைப்புகளோ தூண்டிவிடும்போதும் கும்பல் வன்முறை நிகழ்கிறது. அதில் இலக்காகிறவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலை மக்களாகத்தான் இருப்பார்கள்” என்கிறார் குருமூர்த்தி. அடக்கிவைக்கப்படுகிற கூட்டத்தின் கோபம் இலக்கில்லாமலோ தவறாகவோ திசைதிருப்பப்படும்போது அது எளியவர்கள்மீதுதான் பாயும். பட்டியலினத்தவர், பழங்குடியினர், புலம்பெயர்ந்தோர், பெண்கள் போன்றோர்தான் இலக்காக இருப்பார்கள். டெல்லி பெண் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையும் அதைப் போன்றதுதான் என்கிறார் அவர். சாதி, மதம், இனம், மொழி, பாலினம் என்று ஏதோவொன்றின் அடிப்படையில் குழுவாகச் சேர்ந்து பிறரை எதிராளியாகப் பாவித்துக்கொள்வதும் கும்பல் மனநிலைதான் என்கிறார் அவர்.
“அவன் நம் ஆள் இல்லை என்பதும் கும்பல் மனநிலைக்குக் காரணம். சந்தேகம், வெறுப்புணர்வு, பாதுகாப்பற்ற தன்மை போன்றவை இதை ஊக்குவிக்கும். பிரிவினைவாதத்தைத் தூண்டிவிடுவது மிக எளிது என்பதால் இதன் அடிப்படையில் நிகழ்த்தப்படும் கும்பல் வன்முறை அதிகம். கும்பல் வன்முறையில் ஆண், பெண் பேதமில்லை” என்று சொல்கிறார் குருமூர்த்தி.
நிறைவேற்றப்படாத சட்டம்
சில மாநிலங்களில் கும்பல் கொலைகளுக்கு எதிரான சட்ட மசோதாக்கள் உருவாக்கப்பட்டன. கும்பல் வன்முறையால் ஒருவர் கொல்லப்பட்டால் அதில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வகைசெய்யும் வகையிலான சட்ட மசோதா, 2018-ல் மணிப்பூர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. ராஜஸ்தானிலும் கும்பல் வன்முறையைத் தடைசெய்யும் சட்ட மசோதா 2019 ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டது. அதே மாத இறுதியில் மேற்கு வங்கத்திலும் கும்பல் வன்முறை தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. 2021 டிசம்பரில் ஜார்க்கண்ட் மாநிலமும் கும்பல் வன்முறைக்கு எதிரான சட்ட மசோதாவைத் தாக்கல் செய்துவிட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. கும்பல் வன்முறை கொலைக்குற்றத்தின் கீழ் வராது என்கிற நிலையில்தான், இதற்கெனத் தனிச் சட்டத்தை இயற்றியுள்ளன இந்த மாநிலங்கள். ஆனால், கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்தும் இந்த சட்ட மசோதாக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை.
“கும்பல் வன்முறையைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதி உடனடியாக நடவடிக்கை எடுப்பது நல்லது. அதேநேரம், இதற்குப் பின்னால் இருக்கும் காரணிகளையும் கண்டறிந்து, அவற்றைக் களைவதற்கான செயல்பாடுகளிலும் அரசு ஈடுபட வேண்டும். எந்த இடத்தில் ஏற்றத்தாழ்வும், பாகுபாடும், சமநிலையின்மையும் நிலவுகின்றனவோ அங்கே கும்பல் வன்முறை நிகழ்வதற்கான சாத்தியம் அதிகம். அதனால், தொலைநோக்குப் பார்வையுடனும் செயல்பட வேண்டும்” என்கிறார் குருமூர்த்தி.
ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் ஒருவரை மற்றவர் அடிமைப்படுத்த நினைக்காத சூழலே கும்பல் வன்முறையைக் கட்டுக்குள் வைக்கும். அப்படியொரு சூழலை உருவாக்கித்தர வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு!