”இப்படியொரு முட்டாள்தனமான கேள்வியா?”: வேலை போனாலும் வைரலான பெண்ணின் வீடியோ


டிஜிட்டல் யுகத்தில் இருந்த இடத்திலிருந்தே வேலை பெறலாம் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு வேலை பறிபோகும் என்பதும் நிஜமாகிவிட்டது. ’மைண்ட் வாய்ஸுனு நெனச்சு சத்தமா பேசிட்டீங்க மேடம்’ என்று சொல்லாமல் சொல்லி வேலை மறுக்கப்பட்டது ஒரு பெண்ணுக்கு. காரணம், அந்தப் பெண்ணின் மைண்ட வாய்ஸ் நிஜ வாய்ஸாக வெளிப்பட்டதுதான்.

சலைன் மார்டினிஸ் என்ற பெண், ஸ்கைவெஸ்ட் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தில் வேலைக்கு விண்ணப்பித்தார். அவருக்கு ஆன்லைனில் வீடியோ நேர்காணல் நடத்த, அந்நிறுவனம் ஏற்பாடு செய்தது. ஒவ்வொரு கேள்விக்கும், தானே விடியோ பதிவு செய்து அனுப்ப வேண்டும் என்பதுதான் விதி. “ஸ்கைவெஸ்ட் கம்பெனியின் பணி கலாச்சாரத்தைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன?” என்பதுதான் முதல் கேள்வி.

கேள்வியைக் கணினித் திரையில் கண்டதும் யாரையோ அலைபேசியில் அழைத்தார் அந்தப் பெண் . மறுமுனையில் இருக்கும் நபரிடம் “இதெல்லாம் ஒரு கேள்வி, இதுவரைக்கும் என்னுடைய வாழ்க்கைல இப்படியொரு முட்டாள்தனமான கேள்வியை கேள்விப்பட்டதே இல்ல” என்று சொல்கிறார். “இதுல நானே என்னுடைய பதில பதிவு செஞ்சு வேற அனுப்பணுமாம்... கண்றாவி!” என்று சொல்லிக்கொண்டே, தனது வீட்டு சோபாவில் சாய்ந்து உதட்டுச்சாயத்தைப் பூசுகிறார்.

இதையெல்லாம் பேசிக் கொண்டிருந்தபோது, தனது கணினி கேமரா ஆன் செய்யப்பட்டு அதில் தான் பேசிய அத்தனையும் பதிவானதை மேடம் அப்போதுதான் சுதாரித்தார். இதில் அவருடைய டிக்டாக் ஹாண்டில் வேறு கனெக்ட் ஆக, அவர் பேசிய அத்தனையும் நேரலையில் கசிந்தது. ஸ்கைவெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பார்வைக்கும் வீடியோ சென்றுவிட்டது. இதற்குப் பிறகும் வேலை கிடைக்குமா என்ன? மேடமுக்கு கைக்கு எட்டிய வேலை, தன்னுடைய வாயாலேயே வாய்க்கு எட்டாமல் போனது. ஆனாலும் இந்த வீடியோ வைரலாக அந்த அம்மணியும் பிரபலமாகிவிட்டார். டிஜிட்டல் யுகத்தில் இதெல்லாம் சகஜமப்பா!

x