ஆரம்ப கல்வி மட்டுமே பயின்ற முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர், தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் பள்ளிகளை திறந்தார். எனவே அவரை கல்விக் கண் திறந்தவர் என போற்றி புகழ்ந்து வருகிறோம். அவரது பிறந்த நாளையும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறோம். அவரது சேவைக்கு இம்மியளவும் குறையாதது தான் ஈரோடு மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொங்காடை மலைக் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின விவசாயி முதியவர் ஜடையன் (70) என்பவரின் தியாகமும்.
மேற்கு தொடர்ச்சி மலை பர்கூர் அருகே அமைந்துள்ளது கொங்காடை கிராமம். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை மட்டுமே ஆதாரமாக கொண்ட இக்கிராமத்தில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். போதிய போக்குவரத்து வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் கொங்காடை மலைக்கிராமத்தை குழந்தைகளுக்கு கல்வி என்பது எட்டாக் கனியாக இருந்தது.
இதையறிந்த தன்னார்வலர்கள் கடந்த 2010ம் ஆண்டு கொங்காடை மலைக் கிராமத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பள்ளியை தொடங்கினர். தன்னார்வலர்கள் மூலம் பள்ளி வகுப்பறைக் கட்டிடம் கட்ட நிதி திரட்டிபோதும் நிலம் இல்லாத காரணத்தினால் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதையறிந்த கொங்காடை மலைக் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின ஏழை விவசாயி ஜடையன் (70) தனக்கு ஜீவனம் அளித்து வந்த நிலத்தை பள்ளி வகுப்பறைக் கட்ட தானமாக வழங்கினார்.
இதையடுத்து அங்கு வகுப்பறைக் கட்டிட்டம் கட்டப்பட்டு பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் கிராம குழந்தைகள் பயின்று வருகின்றனர். தனக்கு கிடைக்காத கல்வி கிராம குழந்தைகளுக்கு கிடைக்கும் நோக்கில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முதியவர் ஜடையன் வழங்கிய நிலம் இன்று பலரின் கல்விக் கண்களை திறக்க உதவி வருகிறது.
அதேவேளையில் பள்ளிக்கு நிலம் வழங்கிய ஜடையன் அதே பள்ளி அருகில் சிறிய மண் குடிசை வீட்டில் வசித்து வந்தார். அந்தக் குடிசையும் ஓட்டை, ஓடிசலான நிலையில் இருந்ததால் மலைக்காலத்தில் அவரின் நிலை பரிதாபம்தான். எவ்வளவு சிரமம் வந்தபோதும் அதை ஜடையன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், முதியவர் ஜடையன் குடிசை வீட்டில் வசிப்பது வகுப்பறை கட்டிய தன்னார்வலர்களுக்கு உறுத்தலாகவே இருந்தது.
எனவே அவருக்கு புதியதாக வீடு கட்டித்தர தன்னார்வலர்கள் முடிவு செய்தனர். அதன்படி சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் சிமெண்ட், மணல் இல்லாமல் வீடு கட்டி, அந்த வீட்டிற்கு பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் என பெயர் சூட்டி சமீபத்தில் முதியவர் ஜடையனிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ஈரோடு சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்.சி.நடராஜ் கூறுகையில், "கடந்த 2010ம் ஆண்டு கொங்காடை கிராமத்தில் குழந்தை தொழிலாளர் பள்ளி தொடங்கப்பட்டது. பள்ளி தொடங்கிய உடனேயே 80 மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தனர். ஆனால், வகுப்பறை இல்லை. அதனால், மரத்தடியில் அவர்களை அமர வைத்து பாடம் நடத்தப்பட்டு வந்தது. அப்போது வேறு பணிக்காக வந்த ஈரோட்டைச் சேர்ந்த தன்னார்வ நண்பர்கள் குழந்தைகள் மரத்தடியில் அமர்ந்து கல்வி பயில்வதைக் கண்டு வகுப்பறைக் கட்ட முன்வந்தனர். உடனடியாக ரூ. 50 ஆயிரம் வழங்கினர். ஆனால், நிலம் இல்லை. இதையறிந்த முதியவர் ஜடையன் தனக்கு சொந்தமான 10 செண்ட் விவசாய நிலத்தை தானமாக வழங்கினார்.
அங்கு வகுப்பறைக் கட்டப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், நிலத்தை வழங்கிய முதியவர் குடிசை வீட்டில் வசித்து வந்தது உறுத்தலாக இருந்ததால் புதிதாக அவருக்கு வீடு கட்டி ஜனவரி 12ம் தேதி அவரிடம் ஒப்படைத்தோம். முதியவர் ஆரம்ப கால கட்டத்தில் பழங்குடியின மக்களுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர். எனவே புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு பழங்குடியின போராளி பிர்சா முண்டா பெயர் சூட்டப்பட்டது. சிறிய வழித்தட பிரச்சினைக்காக வெட்டு குத்து நடைபெறும் இக்காலத்தில் தனது நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கிய முதியவர் ஜடையனின் தியாகம் போற்றத்தக்கது" என்றார்.
பள்ளிகளை கட்டிய காமராஜர் கல்விக் கண் திறந்தவர் என்றால் பள்ளிக் கட்டிடம் கட்ட நிலத்தை வழங்கிய ஜடையனும் கொங்காடை மலைக்கிராம குழந்தைகளின் கல்விக் கண் திறந்தவர் என்றால் அது மிகையில்லை.