டார்ச்சரால் பிரிந்த கணவரை கண்டுபிடிக்க கோர்ட்டுக்கு வந்த டாக்டருக்கு அபராதம்


உயர் நீதிமன்ற மதுரை கிளை

டார்ச்சரால் பிரிந்துசென்ற கணவரை, மாமனார் அடைத்து வைத்திருப்பதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண் டாக்டருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நெல்லையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஹம்சத் தோனி. இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “என் கணவர் கார்த்திக். எங்களுக்கு 25.8.2019-ல் திருமணம் நடைபெற்றது. ஒரு மகன் உள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாக எங்களுக்கு எதிராக, கணவரின் தந்தை ஆறுமுகம் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் 2021-ல் புகார் அளித்தார். அந்தப்புகாரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் என் கணவரை 18.5.2021 முதல் காணவில்லை. கணவரை அவர் தந்தை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. கணவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்தி ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பெண் டாக்டர் ஹம்சத் தோனியின் கணவர் கார்த்திக் காணொலி காட்சி வழியாக நீதிபதிகள் முன்பு ஆஜராகி, “என்னை யாரும் கடத்தவில்லை. தான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை. மனுதாரர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் எனக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமை இழைத்தனர். விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் கட்டாயப்படுத்தி என்னைச் சேர்த்துவிட்டனர். தற்போது சென்னையில் நண்பருடன் நிம்மதியாக வாழ்கிறேன்” என்றார்.

இதையடுத்து, ‘‘மனுதாரர் குடும்பப் பிரச்சினையை மறைத்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற நடைமுறைகளை தவறாகப் பயன்படுத்தியதற்காக அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பணத்தை உயர் நீதிமன்ற கிளை சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு மனுதாரர் வழங்க வேண்டும். ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

x