ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கை முடித்து வைத்தது சிபிஐ


அப்துல் லத்தீப்

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு சீராகப் போய்க்கொண்டிருப்பதாகச் சொன்ன பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், தற்போதைய தீர்ப்பை எதிர்த்துப் போராடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் படித்து வந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 2019, நவம்பர் மாதம் அவர் தங்கியிருந்த விடுதி அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த விசாரணை சிலநாட்களில் சிபிஐக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கை இன்று சிபிஐ முடித்துவைத்தது.

வழக்குக்காக சென்னை வந்திருந்த பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், வழக்கறிஞர் முஹம்மது ஷாவோடு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்கள் கூறியதாவது:

“பாத்திமா தற்கொலை விவகாரத்தில விசாரணை முடிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பாத்திமாவுக்கு வீட்டின் ஞாபகம் அதிகமாக இருந்த காரணத்தால்தான் தற்கொலை செய்து கொண்டதாக சிபிஐ அறிக்கையாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

பாத்திமா தற்கொலைக்கு பேராசிரியர்கள் சிலர் காரணம் என்ற தகவல்கள் வெளியான நிலையில், வீட்டைவிட்டுப் பிரிந்ததுதான் காரணம் எனக் கூறுவது குற்றவாளிகளை மறைப்பதற்கு துணைபோவதாக உள்ளது. இருந்தாலும் எங்கள் தரப்பில் சட்ட ரீதியாகப் போராடுவோம். சிபிஐயின் அறிக்கையைப் பெற்ற பின்னர், மேல்முறையீடு செய்ய உள்ளோம்” என்று அவர்கள் கூறினர்.

x