சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே ‘ரூட்டு தல’ உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, பொது இடங்களில் மோதிக்கொள்ளும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்கும் பொருட்டு போலீஸாரும், கல்லூரி நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் மாணவர் மோதல் சம்பவங்கள் தொடரத்தான் செய்கின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் செய்த கொடுமையால், மாநிலக் கல்லூரி மாணவர் குமார் ரயில்முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இது சக மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பச்சையப்பன் மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே மோதல் உருவாக வாய்ப்புள்ளதால், இரு கல்லூரி வளாகங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநிலக் கல்லூரி வளாகத்தில் ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் இருந்த நிலையில், கூடுதலாக 20 போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல, பச்சையப்பன் கல்லூரிக்கு ஜன.3 வரை விடுமுறை அளிக்கப்பட்டு, அங்கும் ஆய்வாளர் தலைமையில் 10 போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளையும் போலீஸார் கண்காணித்து வரும் நிலையில், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் - செங்கல்பட்டு உள்ளிட்ட வழித்தடங்களில் வரும் ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களுடன் இணைந்து, ரயில்வே போலீஸாரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் ரயில்வே டிஎஸ்பி முத்துக்குமார் மேற்பார்வையில், ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் 50-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டு, பயணிகளின் உடைமைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் கல்லூரி மாணவர்களிடையே கோஷ்டி மோதல், ரூட்டு தல பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சென்னை காவல் துறை, உயர் கல்வித் துறைச் செயலாளர் சார்பில் அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கல்லூரிகளில் பிரச்சினைக்குரிய மாணவர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கவும் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.