சென்னை காவல் துறையில் புதிதாக, தீவிர குற்றங்களைத் தடுக்கும் பிரிவு நாளை(டிச.30) தொடங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர குற்றவாளிகளின் நடவடிக்கையை கண்காணிக்கவும், சட்டவிரோதச் செயல்களை தடுப்பதற்கும், தீவிர குற்றங்களை தடுக்கும் 2 பிரிவுகள் உருவாக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இதையடுத்து சென்னை போன்ற பெருநகரங்களில், தீவிர குற்றங்கள் புரியும் ஏ+, ஏ, பி, சி (A+, A, B, C) என பிரிக்கப்பட்ட ரவுடிகளை கண்காணிக்க 2 தீவிர குற்றங்களைத் தடுக்கும் பிரிவு உருவாக்க, கடந்த நவம்பர் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதனடிப்படையில் சென்னை கூடுதல் ஆணையர் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய அதிகாரிகளின்கீழ் 2 உதவி ஆணையர்கள் தலைமையில் 54 பேர் கொண்ட 2 தீவிர குற்றங்களைத் தடுக்கும் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த 2 பிரிவில் 2 உதவி ஆணையர்கள், 4 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள், 12 தலைமை காவலர்கள், 20 கிரேட் 1 காவலர்கள், 54 கிரேட் 2 காவலர்கள் என 54 பேர் இடம் பெற்றுள்ளனர்.
நாளை முதல் இந்தத் தடுப்புப் பிரிவு செயல்படும். இதையடுத்து இப்பிரிவில் உள்ள அதிகாரிகள், காவலர்கள், தீவிர குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.