தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் ஒமைக்ரான் பரவலைத் தடுக்கவும், தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதையொட்டி தமிழக காவல் துறை சார்பில் டிஜிபி சைலேந்திர பாபு சில வழிமுறைகளையும் அறிவித்திருக்கிறார்.
பண்டிகைக் காலங்களில் கரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால், பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். அதன்படி இம்மாத இறுதிவரை தமிழ்நாட்டின் கடற்கரைகளில் பொதுமக்கள் ஒன்றுகூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
முடிந்தவரை பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறே அவரவர் குடும்பத்தாருடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடன், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டாட வேண்டும்.
மேலும் வழிபாட்டுத் தலங்களில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கரோனா நடத்தை வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். புத்தாண்டு தினத்தில் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும் கூட்டம் கூடுவதையும், இருசக்கர வாகனங்களில் சுற்றுவதையும் தவிர்க்க வேண்டும்.
புத்தாண்டு இரவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டினாலோ, பைக் ரேசில் ஈடுபட்டாலோ கைது நடவடிக்கை எடுக்கப்படும்.
நீண்ட தூரம் பயணம் செய்வோர் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்து, ரயிலிலும், பேருந்திலும் பயணிக்க அறிவுறுத்தப்படுவதுடன், ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிகளின்படி இரவு 11 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும். ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என ஓட்டல் நிர்வாகம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
வெளியூர் செல்வோர் பூட்டிய வீட்டைக் குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால், ரோந்து காவலர்கள் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். இதனால் திருட்டு சம்பவங்கள் தவிர்க்கப்படும்.
பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் ரோந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள். கண்ணியமற்ற மற்றும் அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறை தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
மக்கள் விபத்தில்லா புத்தாண்டைக் கொண்டாட வேண்டும் எனக் கூறியதுடன் தமிழக காவல் துறை சார்பில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.