புத்தாண்டுக்கு முன்பு 68 மீனவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வேண்டும் 


இலங்கை கடற்படை கைது செய்துள்ள 68 தமிழக மீனவர்கள் குறித்த மீட்பு நடவடிக்கைகள், புத்தாண்டுக்கு முன்பு அந்த மீனவர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் வகையில் இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

ராமநாதபுரம் மோர்பண்ணையைச் சேர்ந்த ஜி.திருமுருகன் என்ற தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று(டிச.28) ஒரு அவசர மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 68 பேரை இலங்கை கடற்படையும், கடலோர காவல் படையும் கைது செய்துள்ளன. இது 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிரானது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கையில் பல்வேறு மனித உரிமை மீறலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல் படையால் கடந்த 34 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும் வருகின்றனர். இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பான சூழல் நிலையை ஏற்படுத்துவது மத்திய அரசின் கடமையாகும். எனவே, இலங்கை கடற்படை, கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 10 படகுகளையும் விடுவிக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திக்கேயன், எஸ்.ஸ்ரீமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில், “68 மீனவர்களையும் விடுதலை செய்வது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் தமிழக முதல்வர் பேசியுள்ளார். மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில், தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு ராஜதந்திர நடவடிக்கைகளைக் கையாண்டு வருகிறது. அந்த விவரங்களை தெரிவிக்க அவகாசம் வேண்டும்” என்று கூறப்பட்டது.

இதையடுத்து, “கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தில் புத்தாண்டுக்கு முன்பு மகிழ்ச்சி நிலவும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர்பாக மத்திய அரசு டிச.31-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

x