தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று பிரச்சாரம் செய்துவந்த பெண் சாமியார் அன்னபூரணி, தான் சாமியார் இல்லை என்று சொன்னவர், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், ‘இயற்கை ஒளி என்ற பெயரில் ஆன்மிக தீட்சை கொடுத்து பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறேன். ஆன்மிகப் பயிற்சிக்காக செங்கல்பட்டு வாசுகி மகாலில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி நல்ல முறையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த 24-ம் தேதியிலிருந்து பல யூடியூப் சேனல்களிலும், பிரபல தொலைக்காட்சிகளிலும் என்னையும் எனது ஆன்மிக சீடர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
எனது கணவர் மாரடைப்பால் இறந்ததைக்கூட மர்ம மரணம் என தவறான தகவல் பரப்பப்படுகிறது. ஆன்மிகச் சேவையில் ஈடுபடக் கூடாது என தொலைபேசி, வாட்ஸ்அப் வாயிலாகச் சிலர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
எனவே, எனது சீடர்களுக்கும் எனக்கும் எந்த நேரத்திலும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்னபூரணி, “நான் சாமியாரோ, ஆதிபராசக்தியின் அவதாரமோ இல்லை. நான் கடந்த 6 வருடங்களாக ஆன்மிகப் பணியை மேற்கொண்டு வருகிறேன். என்னையும், என் ஆன்மிகப் பணியையும் கொச்சைப்படுத்தும் வகையில் சிலர் தவறான கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். என்னிடம் தீட்சை பெற்றோருக்கு நான் யார் என்று தெரியும். நேரம் வரும்போது என்னைப் பற்றி நீங்களும் உணர்வீர்கள். என் ஆன்மிகப் பணி தொடரும்” எனக் கூறினார்.