மாநிலக் கல்லூரி மாணவர் ரயில்முன் விழுந்து தற்கொலை


மாணவர் குமார்

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கேலி செய்து அடித்துத் துன்புறுத்தியதால், அவமானம் தாங்காத மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவர் ரயில்முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம், குருவராஜப்பேட்டை பஜார் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மணிவண்ணன். இவரது மகன் குமார்(22), சென்னை மாநிலக் கல்லூரியில் பிஏ வரலாறு முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று(டிச.28) வழக்கம்போல் குமார் கல்லூரிக்குச் சென்றுவிட்டு, பிற்பகலில் புறநகர் ரயில் மூலம் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

ரயில் திருநின்றவூர் வந்தபோது, அங்கிருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் குமார் மற்றும் நவீன் ஆகிய இருவரைப் பிடித்து இழுத்துச்சென்று கேலி, கிண்டல் செய்ததுடன் அவர்களை அடித்து அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது பிடிபட்ட இன்னொரு மாணவன் நவீன், அவ்வழியாக வந்த ரயிலின் மறுபுறம் தாவிக் குதித்து அவர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து மாணவன் குமாரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பிடித்து வைத்துக்கொண்டு, அவரது நண்பர்களுக்கு "உங்கள் மாணவன் ஒருவன் எங்களிடம் சிக்கியுள்ளான். வந்து அவனைக் காப்பாற்றிக் கூட்டிச் செல்லுங்கள்" என ஆடியோ ஒன்றை அனுப்பி உள்ளனர்.

குமாரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து கேலி கிண்டல் செய்து, அடித்து நீண்ட நேரத்துக்குப் பிறகு விடுவித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அவமானத்தால் மன உளைச்சல் அடைந்த மாணவன் குமார், தனது நண்பர்களுக்கு "பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போட்ட பிச்சையில் தன்னால் உயிர்வாழ முடியாது, நான் உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறேன்" என்று கூறி, ஆடியோ ஒன்றை அனுப்பிவிட்டு, அவ்வழியாக பெங்களூரில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

அங்கிருந்த பயணிகள் அளித்த தகவலின்பேரில் வந்த திருவள்ளூர் ரயில்வே போலீஸார் மாணவன் குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் மாணவன் குமார் உயிரிழந்த தகவல் அறிந்து மருத்துவமனைக்குச் சென்ற மாநிலக் கல்லூரி மாணவர்களும், குமாரின் பெற்றோரும் குற்றவாளிகளை கைது செய்யும்வரை மாணவன் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி, மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் கல்லூரி மாணவர்கள் குவிந்ததை அடுத்து திருவள்ளூர் எஸ்பி சந்திரசேகரன் தலைமையில், 20-க்கும் மேற்பட்ட போலீஸார் மருத்துவமனை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

எஸ்பி சந்திரசேகரன் மற்றும் போலீஸார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இவ்வழக்கில் முறையாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெற்றோரும், மாணவர்களும் குமாரின் உடலை வாங்கிச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து திருவள்ளூர் ரயில்வே போலீஸார் தற்கொலை செய்துகொண்ட மாணவன் குமார் அனுப்பிய ஆடியோ மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் மாநில கல்லூரி மாணவர்களுக்கு அனுப்பப்பட்ட ஆடியோவைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் ரகளை செய்யும் நிகழ்வுகளைத் தடுக்க, சென்னை போலீஸார் ‘ரூட் தல’ என்று வாட்ஸ்அப் குழு ஒன்றை ஆரம்பித்தனர். அதன் மூலம் ரகளை மாணவர்கள் கண்காணிக்கப்படுவர் என்று அறிவித்திருந்தனர். அது அறிவிப்பாகவே நின்று போய்விட்டதா என்று பலரும் கேள்வி எழுப்பும் நிலையில், மாணவர்கள் இப்போது புறநகர் மின் ரயில்களில் தங்களது சேட்டைகளை அரங்கேற்றி வருகின்றனர்.

நேற்று திருவள்ளூருக்குச் சென்றுகொண்டிருக்கும் மின் ரயிலில் ஆவடி நெருங்கும்போது ஓடும் ரயிலில் மாணவர்கள் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர். மாணவர்கள் சிலரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் செல்ல, மற்ற மாணவர்கள் அடுத்த நிறுத்தமான இந்து கல்லூரி நிறுத்தத்தில் பயணிகள் ரயிலை மறியல் செய்ததில் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.

x