போலி செயலி வழியே கிரிப்டோ கரன்சியில் பொதுமக்களை முதலீடு செய்ய வைத்து, ஒரே வாரத்தில் 6 பேரிடம் சுமார் ரூ.3 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
கண்ணுக்குப் புலப்படாத பணமான கிரிப்டோ கரன்சியில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பலர் முதலீடு செய்துவருகின்றனர். முன்னாள் அதிமுக அமைச்சர்களும் இந்த கிரிப்டோ கரன்சியில் சட்டவிரோதமாக முதலீடு செய்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் பலரும் கிரிப்டோகரன்சி மூலமாக முதலீடு செய்து வருதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘கிரிப்டோ கரன்சியில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம்’ என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, பொதுமக்கள் பலர் அதில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த மோசடி வலையில் சிக்கிய பலர் கோடிக்கணக்கான பணத்தை இழந்த அவலமும் அரங்கேறியுள்ளது.
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வேண்டுமென்றால், இந்தியப் பணத்தை டாலர்களாக மாற்றி, பின்பு செயலி மூலமாகத்தான் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யமுடியும்.
சில செயலிகளின் விளம்பரங்களைப் பார்த்து நம்பிய பொதுமக்கள் பலர், லட்சக்கணக்கில் செயலிகள் மூலமாக கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து வருகின்றனர். ஒருகட்டத்தில் முதலீடு செய்த பணம் இரட்டிப்பானவுடன் தங்களது பணத்தை வங்கிக் கணக்குக்கு மாற்ற முயலும்போது, பணத்தை மாற்றமுடியவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதையடுத்து சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 6-க்கும் மேற்பட்டோர் 2.5 கோடி ரூபாய் வரை கிரிப்டோ கரன்சி மூலமாக முதலீடு செய்து பணத்தை இழந்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து, “கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி மோசடி கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக நினைத்து, போலியான செயலிகளில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம். இதுபோன்ற மோசடி செயலிகளை உருவாக்கிப் பணத்தைக் கொள்ளையடிக்கும் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது” என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.