ஓடும் ரயிலில் கேக் வெட்டியதாக 4 கல்லூரி மாணவர்களை ரயில்வே போலீஸார் பிடித்துச் சென்றதால், சகமாணவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் பணயம் செய்த கல்லூரி மாணவர்கள் சிலர், ரயில் ஆவடி அருகே வரும்போது ஓடும் ரயிலில் பிறந்தநாள் கேக் வெட்டி ரகளையில் ஈடுபட்டனர்.
பயணிகள் அளித்த தகவலின் பேரில், அங்குவந்த ரயில்வே போலீஸார் 4 கல்லூரி மாணவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது சக மாணவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், விசாரித்துவிட்டு அனுப்புவதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஆவடியிலிருந்து ரயில் புறப்பட்டுச் சென்றது. ஆனால், அடுத்த நிறுத்தமான ஆவடி இந்துக் கல்லூரி அருகே திடீரென்று ரயில் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி இறங்கிய மாணவர்கள், தண்டவாளத்தில் நின்று மறியலில் ஈடுபட்டனர்.
பத்து நிமிடத்துக்கும் மேலாக மாணவர்கள் ரயிலை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஆவடி-திருவள்ளூர் வழியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீஸார் மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, விசாரணைக்கு அழைத்துச் சென்ற கல்லூரி மாணவர்களை விடுவிப்பதாக போலீஸார் தெரிவித்ததை அடுத்து, மாணவர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். மாணவர்களின் இந்தப் போராட்டத்தால் ரயில் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.