இலங்கை கடற்படை கைது செய்த 68 மீனவர்களை விடுவிக்க வேண்டும்


இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களையும், 10 படகுகளையும் விடுவிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று அவசர மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மோர்பண்ணையைச் சேர்ந்தவர் ஜி.திருமுருகன் என்ற தீரன் திருமுருகன். தமிழ்நாடு மீனவர் உரிமைப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், ‘நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையும், கடலோரக் காவல் படையும் டிச.18-ல் 43 பேர், டிச.19-ல் 12 பேர், டிச.20-ல் 13 பேர் என 68 பேரை கைது செய்து, அவர்களின் 10 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இவர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நடவடிக்கை 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிரானது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கையில் பல்வேறு மனித உரிமை மீறலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் உடல் முழுவதும் கிருமிநாசினி தெளித்து அவமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல் படையால் கடந்த 34 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும் வருகின்றனர். கடந்த அக்.18-ல் இலங்கை கடற்படை கப்பல் மோதி தமிழக மீனவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை மத்திய வெளியுறவுத் துறை கண்டிக்கவில்லை. ஆனால், கடந்த நவ.7-ல் பாகிஸ்தான் கடலோர காவல் படை துப்பாக்கியால் சுட்டதில் குஜராத் மீனவர் ஒருவர் உயிரிழந்தார். அப்போது இந்திய வெளியுறவுத் துறை செயலர் பாகிஸ்தான் தூதரக அதிகாரியை நேரில் அழைத்து எச்சரித்தார். தமிழக மீனவர்கள் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

இந்திய மீனவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது மத்திய அரசின் கடமையாகும். 68 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மற்றும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மீனவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எனவே, இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களையும், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 10 படகுகளையும் விடுவிக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நாளை நடைபெறும் விடுமுறைக் கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

x