‘தன்னைக் கடவுளின் அவதாரம் என்று பொய் பரப்புரை செய்யும் போலி சாமியார் அன்னபூரணியைக் கைது செய்ய வேண்டும்’ என, இந்து அமைப்புகள் சார்பில் காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பெயர் அன்னபூரணி அரசு அம்மா. இவர் தன்னைக் கடவுளின் அவதாரம் என்றும் ஆதிபராசக்தியின் மறு உருவம் எனவும் கூறி, மக்களுக்கு அருள்வாக்கு வழங்கி வருகிறார். இவரது யூடியூப் பக்கத்தில் பல்வேறு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
செங்கல்பட்டைச் சேர்ந்த இந்த அன்னபூரணி, கடந்த சில மாதங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது தனது ஆண் நண்பர் அரசுவுடன்தான் வாழ்வேன் என்று தெரிவித்த வீடியோவை மேற்கோள்காட்டி, மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் ‘அன்னபூரணி அரசு அம்மா’ என்ற பெயரில் போலிச் சாமியாராக வலம் வருவதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும் பல்வேறு காவல் நிலையங்களில் ‘போலி சாமியார் அன்னபூரணி அரசு அம்மாவைக் கைது செய்ய வேண்டும்’ என இந்து அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக இந்து சேவா சங், பாரத் முன்னணி உள்ளிட்ட 5 இந்து அமைப்புகள் சார்பில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதில், ஒழுங்கீனமான அன்னபூரணி அரசு போலி சாமியாராக வலம் வருவதுடன், தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் எனக்கூறி இந்துக் கடவுளை கொச்சைப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றார். எனவே, அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
புகாரளித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாரத் முன்னணி மாநில தலைவர் சிவாஜி, “தனிமனித ஒழுக்கமின்றி வாழ்ந்து வந்த பெண், தற்போது அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் தன்னைக் கடவுளின் அவதாரம் எனக்கூறி பொய் பரப்புரை செய்து மக்களை ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது. ஒருவர், தன்னை சாமியார் என்று கூறிக்கொள்வதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், கடவுளின் அவதாரம் என்று கூறுவதைக் கண்டிக்கின்றோம்.
மலம், ஜலம், பசி இல்லாதவனே கடவுள். இவை மூன்றும் உள்ள ஒருவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்? கடவுளின் பெயரால் மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றும் அன்னபூரணி மீது மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துதல், இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டுதல், மதங்களைப் பயன்படுத்தி குற்றச்செயல் புரிதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.