நண்பரின் கடைக்குச் சென்றிருந்தேன். சத்தமில்லாமல் மிக சன்னமாக எப்போதும் பாடல்கள் அவர் கடையில் ஒலித்துக்கொண்டிருக்கும். பழுத்த ஆன்மிகவாதி. நெற்றி நிறைய பட்டை, ஒரு ரூபாய் நாணயம் அளவுக்குக் குங்குமம் பூசியிருப்பார். அவர் நண்பரானதே பாடல்கள் மூலம்தான்.
என் குழந்தைகளுக்கு பென்சில், பேனா வாங்க முதன்முதலில் போனபோதே அந்தக் கடை எனக்குப் பிடித்துப்போனது. அதற்குக் காரணம் கடையில் ஒட்டப்பட்டிருந்த இளையராஜா போஸ்டர். கண்களை மூடியபடி ஆர்மோனியம் வாசிக்கும் ராஜாவின் அந்தப் போஸ்டரைப் பார்த்தவுடனே, அந்தக் கடைக்காரர் எனக்கு நீண்ட நாள் நண்பரைப் போல மாறிவிட்டார். பெரும்பாலும் அவர் கடையில் ராஜா பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும். பிறகு சொல்லவா வேண்டும். இப்படித்தான் நண்பரானோம்.
ஒவ்வொரு ஆண்டும் விரதமிருந்து சபரிமலை செல்லக்கூடியவர் அவர். அவர் கடையில் நான் போனபோது, இசைமுரசு இ.எம்.நாகூர் ஹனீபா பாடிய பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.
எங்கும் நிறைந்த இறையோனே
என் முகம் பாராததே
பொங்கும் கருணை ரஹ்மானே
பேரருள் தாராததேன்...
எனும் வரிகள் கொண்ட அற்புதமான பாடல் அது. எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. என் புருவம் வியப்பில் விரிந்ததைப் பார்த்தவுடன், “வாங்கண்ணே... மனுசன் எப்படி பாடியிருக்காரு பாருங்க” என்றார். இசை என்பது மொழி, மதம் கடந்தது எவ்வளவு உண்மை. மனித ரசனை என்பது மதங்கள் என்ற முகமூடிகளை அணிந்துகொள்வதில்லை என்பதற்கு அவர் உதாரணமாகத் தெரிந்தார்.
இசைமுரசுவின் குரலுக்கு அடிமையானவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். அவர் உச்சஸ்தாயியில் பாடும் பாடல்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் இஸ்லாமிய மதம் சார்ந்ததாக இருந்தாலும், அதைத் தாண்டி அவர் குரலில் ஒலிக்கும் கம்பீரம்தான், அவரை எல்லா மதத்தினருக்கும் பிடித்தமானவராய் மாற்றி வைத்திருக்கிறது.
அவர் பாடும் பாடல்களைப் பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள். ஆனால், அந்தப் பாடல்களை எழுதிய கவிஞர்களைப் பற்றி பெரிதாக யாரும் பேசுவதில்லை. இந்தக் கட்டுரை அந்த கவிஞர்களை நினைவுகூரும் முயற்சி!
நாகூர் புலவர் ஆபிதீன், புலவர் தா. காசிம், கவிமணி பேராசிரியர் அப்துல் கஃபூர், கலைமாமணி நாகூர் சலீம், சாரண பாஸ்கரன், நாகூர் சேத்தான், கிளியனூர் அப்துல் சலாம், மதிதாசன் போன்ற எண்ணற்ற கவிஞர்கள் எழுதிய பாடல்கள் வழியே, இஸ்லாமிய இசை கீதங்களை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இருக்கும் தமிழ் நெஞ்சங்களில் சேர்த்தவர் நாகூர் ஹனீபா. ஹர்மோனியத்துக்குள் இருந்து வெளிப்படும் காற்று போல, கவிஞர்களிடமிருந்து வெளிப்பட்ட கற்பனைக்குத் தனது குரலால் அழகிய பட்டாடை கட்டிப்பார்த்தவர் நாகூர் ஹனீபா. அவர் பாடிய சூப்பர் ஹிட் என்று சொல்லக்கூடிய பல பாடல்களை எழுதியவர் மதிதாசன்.
உம்மை ஒருபோது நான் மறவேன் மீரா
ஷாஹே மீரா
எம்மான் நபிநாதர் வாஞ்சைமிகும் பேரா...
என்ற புகழ்பெற்ற பாடலுக்குச் சொந்தக்காரர். இப்பாடலின் தொகையறாவை எழுதியவர் குணங்குடி மஸ்தான் சாஹிப் என்பது குறிப்பிடத்தக்கது. மதிதாசன் என்ற சாயீர் அப்துல் ரஹீம், நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொரவாச்சேரியைச் சேர்ந்தவர். 1923-ம் ஆண்டு பிறந்த இக்கவிஞர், நாகூர் ஹனீபாவுக்கு அதிகமான பாடல்களை எழுதியவர்.
எங்கும் நிறைந்த இறையோனே
என் முகம் பாராததேன்
பொங்கும் கருணை ரஹ்மானே
பேரருள் தாராததேன்....
என்று நாகூர் ஹனீபாவின் இறைஞ்சும் வரிகளுக்குச் சொந்தக்காரர் இந்த மதிதாசன்தான். இசையமைப்பாளர் எம்.முத்து இசையில், நாகூர் ஹனீபா பாடிய பல பாடல்களை எழுதியவர் மதிதாசன்.
ஆற்றல் மிகும் அல்லாஹ்
போற்றுகின்றேன் அல்லாஹ்
ஆற்றல் மிகும் அல்லாஹ்
உன்னை போற்றுகின்றேன் அல்லாஹ்...
என்ற பாடலும் மதிதாசன் எழுதியதுதான்.
கருணைக் கடலாம்
காதர் வலியின்
காரண சரிதம் கேளுங்கள்,
அருமை நாதர்
சாகுல்ஹமீது ஒலி
அற்புத சரிதம் கேளுங்கள்...
என்ற எம்.முத்துவின் அழகிய இசையில், நாகூர் ஹனீபாவின் குரலில் ஒலித்த பாடலையும் அவர் தான் எழுதினார். நாகூர் ஹனீபா, பி.வசந்தா பாடிய இந்தப் புகழ்பெற்ற பாடலை எழுதியவர் மதிதாசன்.
ஏகன் உண்மை தூதரே
ஏகன் உண்மை தூதரே
யா நபியே யா ரஸூலே யா ஹபிபே யா முஸ்தபா
எங்கள் ஸலாம் எங்களன் பின் ஸலாம்
எங்கள் ஸலாம் எங்களன் பின் ஸலாம்
ஏகன் உண்மை தூதரே
யா நபியே யா ரஸூலே யா ஹபிபே யா முஸ்தபா
எங்கள் ஸலாம்
எங்களன் பின் ஸலாம்
எங்கள் ஸலாம் எங்களன் பின் ஸலாம்..
அற்புதமான இசையும், அதைத் தொடரும் இருகுரலிசையுமாக... கேட்போரைக் கிறங்கவைக்கும் பாட்டு இது. நாகூர் ஹனீபாவுக்குப் பாடல் புனைந்த மற்றொரு கவிஞர் கிளியனூர் அப்துல் சலாம். சந்தத்துக்குப் பாட்டெழுதி சொந்தமாக மெட்டமைக்கும் திறமை பெற்றவர் சலாம்.
இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் - அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை
என்ற நாகூர் ஹனீபாவின் புகழ்பெற்ற பாடலுக்குச் சொந்தக்காரர் அப்துல் சலாம். இஸ்லாமியர்கள் அல்லாத எல்லோருக்கும் இந்தப் பாடல் மனப்பாடம். ஏனென்றால், நாகூர் ஹனீபாவின் ஏற்றம், இறக்கம் மிகுந்த குரல் கிறக்கத்தைத் தந்த பாடலிது.
தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்
வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்
அலைமுழுங்கும் கடல்படைத்து அழகுபார்ப்பவன்
அலையின் மீதும் மலையின்
மீதும் ஆட்சி செய்பவன்
தலை வணங்கி கேட்பவருக்கு தந்து மகிழ்பவன்
தரணி எங்கும் நிறைந்து
நிற்கும் மகா வல்லவன்
இறைவனிடம் கையேந்துங்கள்...
என இந்தப் பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தபூர்வமானது. ‘மக்கத்து மலரே மாணிக்கச் சுடரே’, ‘இருளில் நிலவாகப் பிறந்தார்’ போன்ற பாடல்களையும் அப்துல் சலாம் எழுதியுள்ளார். அவர் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்று உள்ளது.
இறைவா உன்னைத் தேடுகிறேன்
அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன்
அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன்
ஆசையுடன் உன்னை நாடுகிறேன்
அந்த ஆர்வத்திலே தான் பாடுகிறேன்...
எனத் தொடங்கும் இப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதது.
நாகூர் ஹனீபா பாடிய பல புகழ்பெற்ற பாடலுக்குச் சொந்தக்காரர் காசிம் புலவர். காயல்பட்டினத்தைச் சேர்ந்த தா. காசிமின் ஆசிரியர் திருவடிக் கவிராயர். காசிமின் செய்யுள் இயற்றும் திறமை, தமிழ்க் கவி படைக்கும் தன்மை அறிந்து அவருக்கு ‘வரகவி’ பட்டத்தை அவரது ஆசிரியரே வழங்கியுள்ளார். தா.காசிம் எழுதிய ஒவ்வொரு பாடலும் புகழ்பெற்றது.
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
கொஞ்சம் நில்லு - எங்கள்
திருநபியிடம் போய்ச் சொல்லு
சலாம் சொல்லு...
எனும் நாகூர் ஹனீபாவின் புகழ்பெற்ற பாடல், தா.காசிம் எழுதியதுதான். இசைஞானி இளையராஜா, சினிமா இசையமைப்பாளராகப் புகழ்பெறுவதற்கு முன்பே மெட்டமைத்த பாடல் இது.
அண்ணல் நபி பொன் முகத்தை கண்கள் தேடுதே
அந்த ஆவலினால் காவலின்றி இதயம் வாடுதே....
என்ற அழகிய பாடலை எழுதிய தா.காசிம், ‘தீன்குலக் கண்ணு எங்கள் திருமறைப் பொண்ணு’, ‘தாயிஃப் நகரத்து வீதியிலே’ போன்ற பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
கண்டு வரலாம் சென்று வரலாம்
கனிவுடனே மாமதினா
அன்பாகவே அழகாகவே...
என ஒலிக்கின்ற, மிக வேகமான தாளக்கட்டைக் கொண்ட பாடலையும் எழுதியுள்ளார். ‘கண்கள் குளமாகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே’, ‘நபி வழி நடந்தால் நரகமில்லை’, ‘கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள் கண்மணியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள்’, ‘எந்தத் துன்பம் வந்தபோதும் துணிந்து நில்லு’, ‘தீன்குலக் கண்ணு எங்கள் திருமறைப் பொண்ணு’, ‘மணலில் நடந்து இருளைக் கடந்து’, ‘கண்ணுக்கு இமைபோன்ற பெண்ணே’, ‘போவோம் மதினா புகழ்பாடியே நாம்’, ‘வானில் தவழும் வெண்ணிலவே’, ‘வெள்ளிப் பனிமலை’, ‘உலகத்தில் நான் உன்னருளை’, ‘சன்மார்க்க ஜோதியான நபி’, ‘அண்ணல் நபியின் பொன்மொழியே’, ‘வான்மறைச் சோலையில்’, ‘எத்தனை தொல்லைகள்’, ‘எங்கே இருக்கின்றான்’, ‘கஸ்தூரி மணங் கொடுத்த’, ‘யாரசூலல்லா யாஹபீபல்லா’ போன்ற எண்ணற்ற பாடல்களை தா.காசிம் எழுதியுள்ளார்.
எல்லாப் புகழும் இறைவனுக்கு
அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு
என அவர் எழுதிய பாடல், இன்றும் இஸ்லாமிய கீதங்களில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளது. திராவிட இயக்கப் பற்றாளரும், மிகச்சிறந்த கவிஞருமான நாகூரைச் சேர்ந்த சலீம் எழுதிய பாடல்கள், காலப்பெட்டகங்கள் என்றே சொல்லலாம். 7,500-க்கும் அதிகமான இஸ்லாமிய பாடல்களை எழுதி சாதனை படைத்தவர் இவர். இவர் எழுதிய பாடல்களை நாகூர் ஹனீபா, ஏஆர்.ஷேக் முஹம்மது, இறையன்பன் குத்தூஸ், சாகுல் ஹமீது, வாணி ஜெயராம், ஸ்வர்ணலதா உள்ளிட்ட பலர் பாடியுள்ளனர்.
அறிஞர் அண்ணா மறைவையொட்டி நாகூர் சலீம் எழுதிய இந்தப் பாடல் தமிழகம் முழுவதும் நாகூர் ஹனீபாவின் குரலில் ஒலித்தது.
பட்டு மணல் தொட்டிலிலே
பூ மணக்கும் தென்றலிலே
கொட்டும் பனி குளிரினிலே
கடல் வெளிக் கரையினிலே.....
அற்புதமான சொல்வளத்துக்குச் சொந்தக்காரரான சலீம், அண்ணாவுக்கு எழுதிய மற்றொரு பாடல்,
சிரித்துச் செழித்த உன் முகம் எங்கே
சிந்திய செந்தமிழ் மொழி எங்கே
சிரித்தது போதுமென்று நிறுத்திக்கொண்டாயோ
சிந்திக்கும் இடம்தேடித் தனித்துச் சென்றாயோ....
இன்றளவும் திமுக பொதுக்கூட்டங்களில் தவறாமல் ஒலிக்கும் பாடல் இது. மேடையில் நாகூர் ஹனீபா பாடியதைக் கேட்டு பலரும் கண்கலங்கியிருக்கிறார்கள்.
அல்லாவை நாம் தொழுதால் – சுகம்
எல்லாமே ஓடி வரும் – அந்த
வல்லோனை நினைத்திருந்தால். – நல்ல
வாழ்க்கையும் தேடி வரும்...
என நம்பிக்கையூட்டும் வகையில் சலீம் எழுதிய வரிகள், இஸ்லாமிய குடும்பங்களில் தேசிய கீதமாய் இருக்கிறது.
திருமறையின் அருள் மொழியில்
விளைந்திருப்பது என்ன? அறிவு
இறை தூதர் நபி பொன் மொழியில்
பொதிந்திருப்பது என்ன? அன்பு
அறிவில் உருவாகி
அன்பில் நிறைவதென்ன? ஞானம்
அந்த ஞானத்தை வழங்கிடும்
மூலப் பொருள் என்ன? மௌனம் மௌனம்....
பின்னணிப் பாடகி கே.ராணியுடன் நாகூர் ஹனீபா பாடி புகழ்பெற்ற இந்தப் பாடலும் நாகூர் சலீமின் கற்பனையில் உருவானதுதான். கேள்வி, பதில் பாணியில் அமைந்த இப்பாடல், கேட்போரை ரசிக்க வைக்கும்.
தீனோரே நியாயமா மாறலாமா
தூதர் நபி போதனையை மீறலாமா
உள்ளம் சோறலாமா....
என்ற கேள்வியையும் எழுப்பியது இதே சலீம்தான். உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர் என்ற நாகூர் ஹனீபாவின் புகழ் பெற்ற பாடலையும் எழுதினார். அழகிய கட்டிடத்தின் எழில் தோற்றத்துக்கு வேராக இருப்பது அதன் அடித்தளம். அது போலத்தான் நாகூர் ஹனீபாவின் இத்தனை இனிமையான பாடல்களுக்குப் பின் இத்தனை கவிஞர்களின் உழைப்பு இருக்கிறது. அந்த உழைப்பின் பலன்தான் இன்று இத்தனை இஸ்லாமிய கீதங்களை உலகுக்குத் தந்துள்ளது!