குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்களை வெட்டி எடுத்து, லாரி மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டுசெல்லும் பணியில், ராணுவத்தினரும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் நஞ்சப்ப சத்திரத்தில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் பயணித்த முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன.
ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் விமானப் படையினர் மற்றும் ராணுவத்தினர் தொடர்ந்து ஆய்வுகள் செய்து வந்தனர். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியான ஏர் மார்ஷல் மானவேந்தர் சிங் தலைமையிலும், தமிழக காவல் துறை சார்பில் கூடுதல் எஸ்பி முத்துமாணிக்கம் தலைமையிலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பரபரப்பாக இருந்த நஞ்சப்ப சத்திரம் பகுதி, தற்போதுதான் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. அப்பகுதி மக்கள் வழக்கம்போல் தங்களது அன்றாடப் பணிகளுக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் மீதமுள்ள பொருட்களை உடைத்து எடுத்துச்செல்லும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதில் ஹெலிகாப்டரின் என்ஜின் மட்டுமே கிட்டத்தட்ட 1.50 டன் எடையுள்ளது. இதுபோன்ற பெரிய அளவிலான, எடை கூடுதலான பாகங்களை கிராமத்தின் வழியாக எடுத்துச்செல்ல முடியாது என்பதால், வேறு வழி உள்ளதா என ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இதுகுறித்து ராணுவம், காவல் துறையினர், வனத் துறையினர் கலந்தாய்வு நடைபெற்றது. விபத்து நடந்த இடம் ஆங்கிலேயர் காலத்தில் மாட்டுவண்டி சென்றுவந்த பாதையாகும். அந்த இடத்தில் இருந்து கீழ்ப்பகுதியில் சுமார் 200 மீட்டர் தொலைவில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை உள்ளது. எனவே, அந்த வழியாக அதிக எடையுள்ள பொருட்களை எடுத்துச்செல்ல முடியுமா என்று ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி முதற்கட்டமாக வனத் துறையினர், அவ்வழியே உள்ள புதர்களை வெட்டிப் பாதையை சுத்தம்செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் கூறும்போது, “விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்களை எடுத்துச்செல்ல மாவட்ட நிர்வாகத்தின் உதவியை விமானப்படையினர் கோரினர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதர மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளோம்” என்றார்.