வெளிநாடுகளுக்கு கப்பலில் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது, அதில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். இன்னொருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை, பாரிமுனையில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி(43), திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீசன்(43) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இருவரும் துறைமுகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கப்பலில் ஏற்றுமதி செய்யும் உணவுப் பொருட்களில் பூச்சிப் பிடிக்காமல் இருக்க, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியைச் செய்து வந்தனர்.
நேற்று(டிச.21) மாலை, சென்னை துறைமுகத்திலிருந்து வியட்நாமுக்கு கப்பலில் சோளம் ஏற்றுமதி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ராமசாமி, ஜெகதீசன் இருவரும் கப்பலுக்குச் சென்று சோளத்தில் பூச்சி பிடிக்காமல் இருக்க, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரமாகியும் சரக்கு அறைக்குள்ளிருந்து ராமசாமி வெளியே வராததால் சந்தேகமடைந்த ஜெகன், அவரைப் பார்க்க உள்ளே சென்றார். பின்னர், நீண்ட நேரமாகியும் இருவரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த கப்பல் கேப்டன் கதவைத் திறந்து உள்ளே பார்த்தபோது, இருவரும் மயக்க நிலையில் இருந்தனர். உடனே இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், ராமசாமி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் இருந்த ஜெகதீசனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தகவலறிந்து வந்த துறைமுகம் போலீஸார் ராமசாமியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.