சென்னையை அடுத்த போரூரில் நடைபெற்ற சாலை விபத்தில், ஐயப்ப பக்தர்கள் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சென்னை, போரூர் அடுத்த முகலிவாக்கம் கோவிந்தராஜ் நகரைச் சேர்ந்த சங்கர்(60), தனது உறவினரான சேலம் சின்னராஜு(28) மற்றும் இவரது நண்பர் மகேஷ்(33) ஆகியோருடன் காரில் சபரிமலைக்குச் சென்று சாமி தரிசனம் முடித்து, இன்று அதிகாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
சென்னை, மவுண்ட்-பூந்தமல்லி சாலை போரூர் கோபாலகிருஷ்ணா திரையரங்கம் அருகே வரும்போது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இவர்கள் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சங்கர், சின்னராஜு இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டிவந்த மகேஷ் பலத்த காயமடைந்தார்.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் சங்கர், சின்னராஜு சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த மகேஷை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக பூந்தமல்லி போக்குவரத்துப் புலனாய்வுப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.