சென்னையில், பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடி ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் குரும்பை கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார்(25), சென்னை பாடியில் தங்கியிருந்து, தனியார் வங்கியில் வாகனக் கடன் வசூல் செய்யும் பிரிவில் பணியாற்றி வந்தார். ஆந்திர மாநிலம் விஜயநகரம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யாஸ்ரீ(20). இவரும் பாடியில் தங்கி, அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் ஜெயக்குமாருக்கும், சரண்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியிருக்கிறது. இந்நிலையில் கடந்த 18-ம் தேதி சரண்யாவை சந்திக்க அவரது பெற்றோர் சென்னைக்கு வந்துள்ளனர். இங்கு வந்தபோது தனது மகளின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது.
சரண்யா பெற்றோர் சென்னைக்கு வந்ததை அறிந்த ஜெயக்குமார், திருவண்ணாமலையில் இருந்து தன் பெற்றோரை அழைத்துவந்து, முறைப்படி சரண்யாவின் பெற்றோரிடம் திருமணம் செய்ய பெண் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு சரண்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜெயக்குமார் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அம்பத்தூர் ரயில் நிலையம், 3-வது வழித்தடத்தில் ஜெயக்குமார், சரண்யா இருவரும் சடலமாக கிடந்துள்ளனர்.
இதைப் பார்த்த பொதுமக்கள் போலீஸுக்கு தகவல் தெரிவிக்க, அங்கு வந்த ஆவடி ரயில்வே போலீஸார் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் இருவரது நண்பர்கள், பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பெற்றோர் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஜெயக்குமார், சரண்யாஸ்ரீ இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.