பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.44 லட்சத்துக்கு ஏலம்!


மத்தியப் பிரதேச மாநிலத்தில் கிராமப்புறங்களுக்கான பஞ்சாயத்து தேர்தல், வரும் ஜனவரி, பிப்ரவரி என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இங்குள்ள ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்பட்டதில், ரூ.44 லட்சம் அளிப்பவர் போட்டியின்றி தேர்வாக உள்ளார்.

மபி மாநிலத்தின் அசோக்நகர் மாவட்டத்திலுள்ளது பட்டோலி கிராமம். இக்கிராமத்தின் தேர்தலுக்கான பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஒரு கோயிலில் ஏலம் நடைபெற்றது. இதற்காக நேற்று கோயிலில் கூடிய கிராமத்தார் முன்பாக, தலைவர் பதவிக்கான ஏலம் தொடங்கியது. ஏலத்தில் பங்கேற்ற நால்வர் முன்பாக குறைந்தபட்ச தொகையாக ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தலைவர் பதவிக்கான ஏலத்தொகை பங்கேற்ற நால்வரால் உயரத் தொடங்கியது.

ஒருநிலையில் ரூ.21 லட்சம் என ஒருவர் கேட்க மற்றவர் அதிகத் தொகையாக ரூ.43 லட்சம் என உயர்த்தினார். இதற்கும் ஒரு லட்சம் அதிகமாக சவுபாக்சிங் யாதவ் என்பவர் ரூ.44 லட்சம் எனக் கேட்க, தலைவர் பதவி அவருக்கானதாய் ஆனது. இனி, அவர் மட்டுமே வேட்பாளராக மனு தாக்கல் செய்து, பட்டோலி கிராமப் பஞ்சாயத்து தலைவராகப் போட்டியின்றி தேர்வாக உள்ளார். இந்த ஏலத்தில் அதற்கான தொகை ஒரு தாளில் முறையாக எழுத்தாகவும் பதிவு செய்யப்படுகிறது.

இதுகுறித்து ’காமதேனு’ இணையத்திடம் மபி மாநில தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, “இதுபோன்ற முறையிலானத் தேர்தலுக்கு அங்கீகாரம் கிடையாது. இதனால், போட்டியிட விரும்பும் மற்ற வேட்பாளர்கள் கிராமத்தாரால் மிரட்டப்படுகிறார்களா எனவும் விசாரித்து வருகிறோம். ஒரே வேட்பாளராக சவுபாக்சிங் தாக்கல் செய்யும் மனு உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், அவரை தேர்வு செய்வதைத் தவிர வேறு வழியில்லை’’ என்றனர்.

இந்தத் தொகையை கிராமத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்காகப் பயன்படுத்துகின்றனர். அதேசமயம், தேர்வாகும் தலைவர்கள் ஊழல் செய்து தனது ஏலத்தொகையை எடுக்க முயற்சிக்காதவாறும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகக் கிராமத்தார் கூறுகின்றனர். இந்த அளவுக்கு தொகை செலுத்தி இப்பதவியைப் பெறுவது அங்கே கவுரவமாகப் பார்க்கப்படுகிறது.

இதனால், அத்தொகையை சவுபாக்சிங் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வசூலித்து கட்டுவதாகத் தெரிவித்துள்ளார். இதை அவர் குறிப்பிட்ட தினங்களுக்குள் கட்டத் தவறினால், அவருக்கு அடுத்தபடியாக ரூ.43 லட்சம் கேட்டவருக்கு தலைவர் பதவி போய்விடும் என்பது விதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பட்டோலியில் இதுபோல், ஏலமுறையில் அதன் தலைவர் தேர்வாவது முதன்முறையல்ல எனத் தெரிகிறது. இதற்குமுன் 2009-ம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலிலும் ஏலமுறையில் தலைவரை கிராமத்தினர் தேர்ந்தெடுத்துள்ளனர். அப்போது அதிகத்தொகையாக ரூ.5 லட்சத்துக்கு கேட்டவர் தலைவராக தேர்வாகி இருந்துள்ளார்.

ஆளும் மத்திய, மாநில அரசுகளின் சட்டதிட்டங்கள் எதுவாக இருப்பினும், தனக்கென ஒருமுறையை வகுத்துக் கொள்வதில் கிராமத்தாருக்கு இணை எவரும் கிடையாது. இதை நிரூபிக்கும் விதமான மத்தியப் பிரதேச மாநிலத்தின் பட்டோலி கிராமவாசிகள் நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.

x