குரூப் கேப்டன் வருண் சிங் மறைவு; மீளா துயரத்தில் நஞ்சப்ப சத்திரம் மக்கள்


ஹெலிகாப்டர் விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வருண் சிங் உயிரிழந்தது, நஞ்சப்ப சத்திரம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குன்னூர் மகளிர் கல்லூரி மாணவியர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டரில் பயணித்தவர்களில் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங், வெலிங்டனில் ராணுவ மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர், சிகிச்சைக்காக பெங்களூரு விமானப்படை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

கேப்டன் வருண் சிங்குக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு இருந்தாலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதையடுத்து ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த புதன்கிழமை ஏற்பட்ட விபத்தின்போது உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண்சிங், ஒரு வார காலத்துக்குப் பின்னர், அடுத்த புதன்கிழமையான இன்று உயிரிழந்துள்ளார். இது, குறிப்பாக நஞ்சப்ப சத்திரம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மூர்த்தி

இந்நிலையில், விபத்து நடந்த இடத்திலிருந்து அவரை உயிருடன் மீட்க உதவிய மூர்த்தி என்பவர், “கேப்டன் வருண் சிங் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு உயர் சிகிச்சை அளித்து உயிருடன் மீட்டு விடுவார்கள் என நம்பியிருந்தோம். அவர் குணமடைந்ததும் அவரைக் காண விரும்பினேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்தது என்னையும் நஞ்சப்ப சத்திரம் மக்களையும் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது” என்றார்.

பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, குன்னூரில் உள்ள பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள், கேப்டன் வருண் சிங் புகைப்படங்களுடன், மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

x