குன்னூர், நஞ்சப்ப சத்திரம் பகுதியில் விபத்து நடந்த காட்டேரி பூங்காவுக்கு முப்படைத் தளபதியின் பெயர் வைக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாகவும், அப்பகுதியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் ரூ.2.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தார்கள். ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதைப் பார்த்தவுடன், நஞ்சப்ப சத்திரம் பகுதி மக்கள் உடனடியாக மீட்புக் களத்தில் குதித்தனர். அவர்கள் கையில் கிடைத்த பாத்திரங்களில் எல்லாம் தண்ணீரைக் கொண்டுபோய், ஹெலிகாப்டரில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
உடனடியாக போலீஸ் மற்றும் ராணுவத்துக்கு தகவல் தெரிவித்து, அவர்களுடன் இணைந்து மீட்புப் பணியும் மேற்கொண்டனர். தங்கள் வீடுகளில் இருக்கும் போர்வைகள், கம்பளிகளைக் கொடுத்து, விபத்தில் சிக்கிய ராணுவ அதிகாரிகளை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல உதவினர். தன்னலம் பாராமல், உடனடியாக களத்தில் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்ட நஞ்சப்ப சத்திரம் மக்கள் அனைவரும் ஒட்டுமொத்த ராணுவத்தினர் இதயங்களிலும் இடம்பிடித்து விட்டனர்.
இந்தக் கிராமத்தினருக்கு விமானப் படை, ராணுவம், போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்ப சத்திரம் பகுதியில், குன்னூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுனிதா இன்று ஆய்வு செய்து, அப்பகுதி மக்களின் தேவைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: “குன்னூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராம மக்களின் கோரிக்கையான தடுப்புச்சுவர், தண்ணீர் வசதி, நடைபாதை வசதி செய்து தரப்படும். குன்னூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அலுவலர்கள், பணிகளுக்கான அளவீடுகள் செய்துள்ளனர். விரைவில் பணிகள் தொடங்கப்படும். மேலும், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் நினைவுச் சின்னம் அமைக்கவும், காட்டேரி பூங்காவை உயிரிழந்த முப்படைத் தளபதி பெயரில் பெயர் மாற்றவும் தமிழக அரசுக்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்றார்.