குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தின்போது, மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், மக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி வெலிங்டன் ராணுவ முகாமில் நடந்தது.
விபத்தில் உதவியோருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணுவ தென் பிராந்திய தலைமை அலுவலர் லெப். ஜெனரல் ஏ.அருண், விபத்தில் உயிரிழந்தோருக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியருக்கு பதக்கம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டோருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.
அப்போது, “துரதிர்ஷ்டவசமாக விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட 10 நிமிடங்களில் அப்பகுதி மக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகமும் துரிதகதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர், அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டு மீட்புப் பணிகளை முடுக்கி விட்டார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசின் துரித நடவடிக்கையால் மீட்புப் பணிகளில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்ட மக்கள் ஒத்துழைப்பு அளித்ததோடு, உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடைகளை அடைத்தனர். மக்களுக்கு ராணுவம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார் ராணுவ தென் பிராந்திய தலைமை அலுவலர் லெப். ஜெனரல் ஏ.அருண்.