ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவிய நஞ்சப்ப சத்திரம் மக்களுக்கு, ராணுவம் சார்பில் மாதந்தோறும் மருத்துவ முகாம் நடத்தப்படும் என ராணுவ தென்பிராந்திய தலைமை அலுவலர் லெப். ஜெனரல் ஏ.அருண் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியை, ராணுவ தென்பிராந்திய தலைமை அலுவலர் லெப். ஜெனரல் ஏ.அருண் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அப்பகுதி மக்களுக்கு ராணுவம் சார்பில் உணவுப் பொருட்கள், கம்பளிகளை வழங்கி நன்றி தெரிவித்தார்.
அப்போது அவர், ‘‘மிகவும் இக்கட்டான தருணத்தில் நீங்கள் செய்த உதவியை ராணுவம் மறக்காது. உங்களுக்கு ராணுவம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் உதவி, நாட்டை காக்கும் எங்களுக்கு ஊக்கமும், தைரியத்தையும் அளிக்கிறது. இந்த உதவிக்கு ராணுவம் சார்பில் உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.
ஓராண்டுக்கு இலவச மருத்துவ முகாம்
இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், உங்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி வரை, ஒவ்வொரு மாதமும் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்படும். வெலிங்டன் ராணுவ மருத்துவமனையிலிருந்து மருத்துவர்கள் வந்து, உங்களைப் பரிசோதித்து மருத்துவ ஆலோசனைகளை வழங்குவார்கள். மருந்துகள் அளிக்கவும் பரிசீலிக்கப்படும். உங்களுக்கு என்ன தேவை எனக் கூறுங்கள், எங்களால் முடிந்ததைச் செய்வோம்’’ என்றார்.
தொடர்ந்து, “உங்கள் கிராமத்துக்கு என்ன தேவை” என்று கேட்க, வண்டிச்சோலை ஊராட்சி தலைவர் மஞ்சுளா சதீஸ்குமார், “தடுப்புச் சுவர், தண்ணீர் வசதி, பட்டா வழங்க உதவி செய்ய வேண்டும்” என்றார்.
இதைக் கேட்ட ஜெனரல் ஏ.அருண், ‘‘எனக்கே பட்டா இல்லை. பட்டா வேண்டுமென்றால், நானும் வருவாய்த் துறையைத்தான் நாட வேண்டும். பட்டா உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து வருவாய்த் துறையிடம் முறையிட வேண்டும்’’ என்றார். இதை கேட்டதும் எழுந்த சிரிப்பலையில் அங்கு நிலவிய இறுக்கமான சூழல் மறைந்து, கலகலப்பாக மாறியதை, அனைவரும் புன்சிரிப்போடு ஏற்றனர்.
பின்னர், விபத்து குறித்து உரிய நேரத்தில் தகவல் அளித்த கிருஷ்ணசாமி மற்றும் சந்திரகுமாருக்கு தலா ரூ.5,000 பரிசுத் தொகை வழங்கினார். அப்போது மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், குன்னூர் சார் ஆட்சியர் தீபனா விஸ்வேஸ்வரி ஆகியோரும் உடனிருந்தனர்.