தமிழ் முஸ்லிம் அடையாள அரசியலும் சினிமா சித்தரிப்புகளும்


சினிமா என்ற ஊடகம் மிக வலுவானது. அதில் பிரதிபலிக்கப்படும் விஷயங்கள் பார்வையாளர்களின் ஆழ்மனங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. அதன் கதாபாத்திரங்கள், சித்தரிப்புகள், காட்சிப் படிமங்கள் மனித மனங்களை உடனடியாக ஆட்கொள்ளக்கூடியவை. மனித நடவடிக்கைகளில்கூட பின்தொடரக்கூடியவை. இதன் காரணமாகத்தான் எழுத்தைவிட காட்சி ஊடகம் இன்றளவிலும் மிக வலுவாக இருக்கிறது. சில நேரங்களில் அதற்குள் வரம்பு மீறல் நிகழ இதுதான் பிரதான காரணம். சமீப ஆண்டுகளாக இந்த சினிமாக்கள் பல சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. அதன் இயக்குநர்கள் அதற்குப் பல விளக்கங்கள் சொன்னாலும், வெகுஜன உளவியலில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ படம் முஸ்லிம் அடையாள அரசியலைப் பேசும் படமாக மாறி இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுவரை வெளிவந்த பெரும்பாலான படங்களில் முஸ்லிம் வாழ்க்கை முறையைப் பேசும் படங்கள் மிகக்குறைவாகவே இருக்கின்றன. அதற்கான மிக முக்கிய காரணம் முஸ்லிம் சமூகம் சினிமா என்ற வலுவான ஊடகத்தை அணுகக்கூடாத ஒன்றாக, மத விரோதமான ஒன்றாக அணுகியதே. குறிப்பாக முஸ்லிம் மத குருமார்கள் சினிமாவை அப்படித்தான் பார்த்தார்கள். பரப்புரை செய்தார்கள். இது முஸ்லிம் பொதுப்புத்தியில் பாவச்செயலாக இருந்ததன் காரணத்தால் (அவர்கள் திரைப்படங்களைப் பார்த்தது வேறு விஷயம்) முஸ்லிம் கதாபாத்திரம் சார்ந்த படங்களை எடுக்க இயக்குநர்கள் முன்வரவில்லை. மேலும் முதலீடு செய்ய தயாரிப்பாளர்களும் முன்வரவில்லை. இதன் காரணமாக பல படங்களில் முஸ்லிம் சமூகம் எதிர்மறையாகச் சித்தரிக்கப்பட்டது.

குறிப்பாக மணிரத்னம் உள்ளிட்ட சில இயக்குநர்களின் படங்கள் போன்றவற்றில் முஸ்லிம் சமூகம் குறித்த எதிர்மறையான போக்கே நிலவியது. ஓர் ஊடகத்தை ஒரு சமூகம் முற்றிலுமாகப் புறக்கணிக்கும் நிலையில், அது அந்த ஊடகத்தால் எதிர்மறையாகச் சித்தரிக்கப்படும். இது உலகளாவிய வரலாற்று உண்மை. அதுவே தமிழில் அரங்கேறியது. இதன் தொடர்ச்சியில் மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இடைக்காலங்களில் வெளிவந்த படங்களில் முஸ்லிம் பெயரோ, அதன் கதாபாத்திரத்தின் சிறு பகுதியோ இருந்தால் போதும், அது நேர்மறையா, எதிர்மறையா என்றுகூட சிந்திக்காமல் உடனே அது முஸ்லிம் அமைப்புகளால் எதிர்க்கப்பட்டது. இதன் காரணமாக இயக்குநர்கள் அந்தக் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினார்கள். இது திரைப்படம் குறித்த சமூக மனோபாவம் மாறிவருவதன் இடைக்கட்டம் எனலாம்.

அதாவது சினிமா பற்றிய எவ்விதப் புரிதலும் இல்லாமல் அதை புறக்கணித்த காலகட்டத்தில் வெளிவந்த படங்களில், தங்களை பற்றிய சித்திரம் எவ்விதம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் பிரக்ஞைகூட இல்லாமல் இருந்தார்கள். இதுதான், அந்த பிரக்ஞை பரிணாமம் அடைந்த காலத்தில் கதாபாத்திரம் சார்ந்த சர்ச்சை ஏற்பட காரணம். கமலின் ‘விஸ்வரூபம்’ அதற்கான சிறந்த உதாரணம். அது சிறந்த படமா என்ற கேள்வியைத் தாண்டி அதை அதிக நாட்கள் ஓடவைத்த பெருமை முஸ்லிம் அமைப்புகளைச் சாரும். மேலும் அரசியல் விளையாட்டு பின்னணி காரணமாக அந்தப் படம் அப்போதைய அதிமுக அரசால் தடை செய்யப்பட்டது. அதே நேரத்தில் மற்றொரு வகையில், தமிழ் முஸ்லிம் சார்ந்த கதாபாத்திரங்கள் நிறைந்த படங்கள்கூட இங்கு அதிக வரவேற்பைப் பெறவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

திரைப்படம் குறித்த முஸ்லிம் சமூகப் பார்வை இப்படி இருக்க, சில சினிமா இயக்குநர்களின் பார்வையோ வேறு மாதிரி இருந்தது. அதாவது, இவர்கள் சினிமாவைப் புறக்கணிக்கிறார்கள் என்பதன் அடிப்படையில், திரைப்படங்களில் விளிம்புநிலையாகவே முஸ்லிம் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டது. அதாவது, தமிழ் முஸ்லிம் சமூகம் என்பது பல்வேறு காலகட்டங்களில் இம்மாதிரியான எதிர்மறையான, தவறான சித்தரிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அதாவது திட்டமிட்டோ, திட்டமிடாமலோ, இயல்பாகவோ, இயல்பற்றோ திரைப்படங்களில் அந்தச் சமூகம் இழிவுபடுத்தப்பட்டது. கசாப்பு கடை பாய், சாம்பிராணி போடும் பாய், திரைப்பட வில்லனின் நண்பனாக இருக்கும் பாய், முகமூடி அணிந்த முஸ்லிம் பெண் இப்படியாகப் பல்வேறு தருணங்களில் பல படங்கள் இம்மாதிரியான காட்சியமைப்பைக் கொண்டிருந்தன. இதன் தொடர்ச்சியானது தமிழ் சமூகப் பொதுப்புத்தியில் முஸ்லிம் பற்றிய பிம்பத்தை ஏதோ ஒருவகையில் எதிர்மறையாக மாற்றியது. இதன் தாக்கம் தமிழ்நாட்டின் பெருநகரங்களில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு மறுக்கப்படுவதில் தொடங்கி, பலவிதமான சிக்கல்களில் கொண்டுபோய் நிறுத்துகிறது. முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்கு மறுக்கப்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இதுவும் ஏதோ ஒருவகையில் உளவியல் தாக்கம் செலுத்துகிறது எனலாம்.

ஆரம்பகால தமிழ் சினிமாவில் சில முஸ்லிம் கதாபாத்திரங்களும், பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக நாகூர் ஆண்டவர் பற்றிய பாடல் அக்காலத்தில் பிரபலமாகவும், பெருந்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருந்தது. அன்றைய காலத்தில் தமிழ் முஸ்லிம் சமூகம் சினிமா பற்றிய எதிர்மறை கருத்தாக்கத்தில் இருந்தது. இதன் காரணமாக முஸ்லிம் கதாபாத்திரங்கள் சார்ந்த திரைப்படங்களை எடுக்க தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தயங்கினர். அதே நேரத்தில் கேரளாவில் இதே காலகட்டத்தில் முஸ்லிம் கதாபாத்திரங்கள் சார்ந்த திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. ‘மணியறா’, ‘மணித்தாலி’ போன்ற முஸ்லிம் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் மலையாளத் திரைப்படங்கள் புகழ்பெற்றவை. அவற்றில் இடம்பெற்ற பாடல்களும் புகழ்பெற்றன. அது அப்படியே பல படங்களாகப் பரிணமித்தது.

மேலும் இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். தமிழ்நாட்டைப் போன்றே கேரளாவிலும் மத குருமார்கள் திரைப்படத்தை மதவிரோதமான ஒன்றாகத்தான் பார்த்தார்கள். ஆனால் அதை மீறி அங்கு திரைப்படங்கள் வெற்றி பெற்றதற்கான மிக முக்கியக் காரணம், அங்குள்ள முஸ்லிம் சமூகம் கலை, இலக்கியம் பற்றிய தெளிவான பார்வையுடனும், சமூகம் குறித்த பிரக்ஞையோடும் இருந்ததே. இந்நிலையில் அங்கு முதல் முஸ்லிம் நடிகையாக நிலம்பூர் ஆயிஷா இருந்தார். இவர் நாடகத் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். அக்காலத்தில் மதகுருமார்களும், அவர்களின் பின்தொடரல்களும் திரைப்படத்தைத் தீவிரமாக எதிர்த்தனர். அது திரைப்படத் துறையில் இயங்கும் முஸ்லிம்கள் வரை நீண்டது. குறிப்பாக நடிகையான நிலம்பூர் ஆயிஷா மீது பெண் என்பதன் அடிப்படையில் அடிப்படைவாதிகள் கடும் கோபத்தில் இருந்தனர்.

இதன் தொடர்ச்சியில் 1960-களில் அவர் ஒரு நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆயிஷாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதிர்ஷ்டவசமாக துப்பாக்கி ரவை நாடக அரங்க திரையைக் கிழித்துக்கொண்டு சென்றது. அதன் காரணமாக ஆயிஷா உயிர்தப்பினார். இப்படியான நிகழ்வுகள் திரைப்படத் துறையினருக்கு முஸ்லிம் வாழ்வியல் சார்ந்து படங்களை எடுப்பதற்கு தயக்கத்தையும், நம்பிக்கையின்மையையும் அளிக்கின்றன.

‘மாநாடு’ திரைப்படம் ஒரு நேர்மறையான, வரவேற்கத்தக்க முயற்சியே. முஸ்லிம் அடையாள அரசியலை இப்படம் அணுகும் விதம் வித்தியாசமானது.

இதற்கான சமீபகால உதாரணம் ‘இன்ஷா அல்லாஹ்’ தமிழ்த் திரைப்படம். பெரும்பாலும் முஸ்லிம் வாழ்வியலைப் பேசும் திரைப்படமான இது இந்திய/உலக அளவில் நடந்த பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை வாங்கியது. ஆனால், தமிழ்நாட்டில் திரைக்கு வந்தபோது போதிய வரவேற்பைப் பெறவில்லை. மேலும் சில முஸ்லிம் அமைப்புகள் இப்படத்தை எதிர்த்தன. மேலும் சில முஸ்லிம் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் படத்தைத் திரையிட முடியவில்லை. சினிமா சார்ந்த அகவய காரணங்களால் பல முஸ்லிம்கள் அதைப் பார்க்க திரையரங்குக்குச் செல்லவில்லை. நாங்கள் பார்க்க வேண்டிய கட்டாயம் என்ன? எங்கள் மீதான கடமையா இது? இப்படியெல்லாம் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டன. மேலும் அரபி பெயர் சார்ந்த அடையாள காரணங்களால், முஸ்லிம் அல்லாதவர்கள் இப்படத்தைப் பார்க்க விரும்பவில்லை. இதை இயக்குநரே வேதனையுடன் குறிப்பிட்டார்.

இப்படியான சூழலில், ‘மாநாடு’ திரைப்படம் ஒரு நேர்மறையான, வரவேற்கத்தக்க முயற்சியே. முஸ்லிம் அடையாள அரசியலை இப்படம் அணுகும்விதம் வித்தியாசமானது. ஒரு திரைப்படம் சமூகத்தை எப்படிச் சித்தரிக்க வேண்டும் என்ற அடிப்படை விதியைப் பிரதிபலிப்பு செய்யும் ஒன்றாக இது இருக்கிறது. இதை அடிப்படையாக வைத்து இதன் அடுத்தகட்டமாக தமிழ் முஸ்லிம் வாழ்வியலை நேரடியாகப் பேசும் படங்கள் தமிழில் அதிகம் வெளிவர வேண்டும். அதற்கான அடிப்படையை இயக்குநர்கள் தோப்பில் மீரான் போன்றவர்கள் எழுதிய நாவல்களில் இருந்தே எடுக்கலாம்.

எச்.பீர்முஹம்மது, எழுத்தாளர், ‘கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் போன்றவற்றில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். தொடர்புக்கு: peerzeena@gmail.com

x