என்னைப் போல் பல முஸ்லிம்கள் சனாதன தர்மத்தை ஏற்க தயாராய் இருக்கிறார்கள்!


உத்தர பிரதேச ஷியா வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவரான சையத் வசீம் ரிஜ்வீ சமீபத்தில் மதம் மாறி, ஜிதேந்தர் நாராயண்சிங் தியாகி என்றானார். இவர், தங்கள் உடைமைகளுக்குப் பாதுகாப்பு அளித்தால், மேலும் பல முஸ்லிம்கள் சனாதன தர்மத்தை ஏற்கத் தயராக இருப்பதாகத் தகவல் அளித்துள்ளார்.

உபியில், அதிகமுள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் வசீம் ரிஜ்வீ. முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்ந்து பல கருத்துகளை கூறி வந்தவர், கடந்த வாரம் திடீர் என இந்துவாக மதம் மாறினார். இவர் தனது பெயரை ஜிதேந்தர் நாராயண்சிங் தியாகி எனவும் மாற்றிக் கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மதம் மாறிய பின் செய்தியாளர்களிடம் முதன்முறையாகப் பேசிய ஜிதேந்தர் நாராயண்சிங், ‘‘நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைப்பேசியில் அழைத்து அவர்களும் என்னைப்போல் தம் தாய் மதத்துக்குத் திரும்ப விரும்புவதாகவும், இதனால் தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்படும் என அஞ்சுவதாகவும் கூறுகின்றனர். இவர்களுக்கானப் பாதுகாப்பை அரசு உறுதி செய்தால், பல முஸ்லிம்கள் சனாதன தர்மத்தை ஏற்கத் தயாராக உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இந்த ஜிதேந்தர்சிங் தியாகி, இந்து மதத்தில் நிலைக்க மாட்டார் எனவும், அவர் மீண்டும் முஸ்லிமாக மாறிவிடுவார் என்றும் உபியில் தகவல்கள் பரவுகின்றன. இதுபற்றி கருத்து கூறிய ஜிதேந்தர்சிங் தியாகி, தான் தற்போது உள்ள மதத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அதிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதுபோல் கருத்துக் கூறுபவர்கள், தன்னை ஷியா பிரிவின் முஸ்லிம் மவுலானாக்கள் மதத்தை விட்டு விலக்கியபோது அமைதி காத்தது ஏன் என விளக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

லக்னோவில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் காஷ்மீர் தெருவில், நாராயண்சிங் பல வருடங்களாக வாழ்ந்து வருகிறார். இவர் முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசத் தொடங்கியதால், இவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அஞ்சப்பட்டது. இதனால், வசீம் ரிஜ்வீயாக இருந்த போதிலிருந்தே அவருக்கு உபி அரசால் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இதுகுறித்து நாராயண்சிங் கூறும்போது, ‘‘மதம் மாறியது எனது சொந்த விருப்பம். என்னைப்போல் மதம் மாற எனது குடும்பத்தினர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளேன். ஆனால், என் தாயிடம் மட்டும் இதைப் பற்றி பேசமாட்டேன். தவிர, அவரிடம் ஆசிகள் பெற விரும்புகிறேன். எனது இறப்புக்குப் பின் உடலை சனாதன தர்மத்தின்படி இறுதிச்சடங்குகள் செய்ய விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டார்.

இறந்த பின் உடலைப் புதைக்க நிலம்

தான் மதம் மாறுவதற்கு முன்பாக வசீமை, ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்கள் மதத்தை விட்டு விலக்குவதாகவும், அவர் இறந்தால் முஸ்லிம்களின் இடுகாடுகளில் இடமளிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தி இருந்தனர். இதற்கு அஞ்சிய வசீம், லக்னோவின் டால்கட்டோராவின் கர்பாலா பகுதியிலுள்ள இடுகாட்டில் தம் இறப்புக்கு பின் உடலைப் புதைப்பதற்காக விலைகொடுத்து நிலம் வாங்கி இருந்தார். இவர் தற்போது மதம் மாறிவிட்டக் காரணத்தால், அந்த நிலத்தை கர்பாலாவின் முத்தவல்லியான சையத் பைஸி, வேறு ஒருவருக்கு ஒதுக்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிபிஐ வழக்கு விசாரணை

அதேபோல், உபி ஷியா முஸ்லிம் மத்திய வக்பு வாரியத்தின் தலைவராக வசீம் இருந்தபோது, நிலபேர ஊழல் புகார் எழுந்தது. இதன் மீதான வழக்குகளை பாஜக ஆளும் உபி அரசு சிபிஐக்கு மாற்றிவிட்டது. இதிலிருந்து தப்பவே இந்துக்களுக்கு ஆதரவாகவும், அயோத்தி வழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராகவும் வசீம் பேசுவதாகப் புகார் உள்ளது. இதில், சிபிஐயிடமிருந்து வழக்கைத் திரும்பப்பெற வேண்டும் என வசீம் எழுப்பிய கோரிக்கையை, முதல்வர் யோகி ஆதித்யநாத் நிராகரித்திருந்தார்.

ஷியா வாரிய உறுப்பினர் பதவி

இந்நிலையில், அந்த வாரியத்தின் உறுப்பினராகவும் சமீபத்தில் அவர் தேர்வாகி இருந்தார். தன் மதமாற்றத்துக்கு முன்பாக, உபியின் 29 ஷியா முஸ்லிம் மசூதிகளின் முத்தவல்லிகளால் வாக்கெடுப்பு முறையில் கிடைத்த பதவிக்கு 21 வாக்குகள் ஆதரவாகக் கிடைத்தன. எனினும் தற்போது அவர் நாராயண்சிங் தியாகி என மதம் மாறிவிட்டதால், தனது ஷியா வாரியப் பதவியில் தொடர முடியாது. எனவே, அப்பதவியை அவர் விரைவில் ராஜினாமா செய்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

x