குன்னூர் மலைப்பகுதியில் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
குன்னூர் ஊராட்சி ஒன்றியம் வண்டிசோ பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இதுகுறித்து குன்னூர் காவல் நிலையத்தில் குன்னூர் ஊரக விஏஓ அருள்ரத்னம் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரில், ‘இப் பகுதியில் ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. அதில் இருந்தது யார் எனத் தெரியவில்லை’ என்று தெரிவித்திருக்கிறார். புகாரின் பேரில் போலீஸார் விசாரித்ததில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணித்துள்ளனர் என்பது தெரியவந்தது.
பின்னர் விபத்து நடந்த இடத்தில் இருந்து ஹெலிகாப்டரின் முக்கியமான பகுதிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
டிஎன்ஏ பரிசோதனை
இந்தவிபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் ஹெலிகாப்டர் உடைந்து தீப்பற்றியதால், அதில் பயணித்தவர்கள் தீயில் சிக்கினர். உயிரிழந்த 13 பேரில் 7 பேரின் உடல்கள் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
மீதி உள்ள உடல்களை அடையாளம் காணுவதில் பெருத்த சிக்கல் ஏற்பட்டுள்ளதால், சிதறி இருக்கும் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிகிறது.
விபத்து நடந்த இடத்தில் இருந்து தற்போது ஹெலிகாப்டரின் கறுப்புப் பெட்டி கண்டறியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.