டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே, உள்ளுக்குள் உறங்கிக்கிடக்கிற இசைமனம் சற்றே தலைதூக்கி எட்டிப்பார்க்கிறது. சென்னையில் டிசம்பர் என்றாலே அது சங்கீத சீஸன் என்றாகிவிட்டது. இதற்கு மியூசிக் அகாடமியின் முன்னெடுப்பு ஒரு முக்கியமான காரணம்.
1926-ல் தொடங்கப்பட்டது மியூசிக் அகாடமி. 1927 டிசம்பரில் சென்னையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட்டுத் திடலில் அகாடமியின் சார்பில் 8 நாட்கள் இசைவிழா நடத்தப்பட்டது. இசைக் கருவிகள், இசை சம்பந்தப்பட்ட புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் ஆகியவை அந்த அரங்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஆராய்ச்சிக் குறிப்புகள் வாசிக்கப்பட்டு இசை பற்றிய விவாதங்கள் நடந்தன. கர்னாடக, இந்துஸ்தானி இசைமேதைகளின் நிகழ்ச்சிகளும் அந்த விழாவில் இடம்பெற்றிருந்தன. இன்றைக்கு டிசம்பர் என்றாலே இசைக் கச்சேரிகள் உடனடியாக நினைவில் வருவதற்கு, 1927-ல் சென்னையில் நடத்தப்பட்ட காங்கிரஸ் மாநாடும் அதையொட்டி 8 நாட்கள் நடத்தப்பட்ட இசைவிழாவும்தான் முன்னோடி. தொடர்ந்து அடுத்த ஆண்டிலேயே மியூசிக் அகாடமி ஒரு சங்கமாகவும் பதிவுபெற்றது.
பாடலின் மொழி தமிழோ, தெலுங்கோ இல்லை வேறு எதுவுமோ... ராகமும் தாளமும்தான் இசையின் உயிரும் மெய்யுமாக இருக்கிறது. பாடகர்களுக்குப் பிடித்தமான ராகம் என்று ஒன்று இருப்பதைப் போல, ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் பிடித்தமான ராகமாக ஒன்று உயிரோடும் உணர்வோடும் கலந்துவிடுகிறது. உவேசா தனது சுயசரிதையில் தனக்குப் பிடித்த ராகம் சஹானா என்று எழுதியிருக்கிறார். கலைஞர் மு.கருணாநிதிக்குப் பிடித்த ராகம் கல்யாணி என்று அவரது பேட்டியிலிருந்து தெரியவருகிறது.
டி.ராஜேந்தரின் ‘நெஞ்சில் ஒரு ராகம்’ என்ற திரைப்படத் தலைப்புதான் நினைவுக்கு வருகிறது. என் நெஞ்சின் ராகம் தர்பாரி கானடா. எனக்கு அதன் ஆரோகணம், அவரோகணம் கூட தெரியாது. இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் ‘ஒரே ராகம்’ என்ற அரைமணி நேர நிகழ்ச்சியில், ஒரே ராகத்தில் அமைந்த ஆறேழு பாடல்களை ஒலிபரப்புவார்கள். அப்படி அறிந்துகொண்டதுதான். ரசிகனுக்குக் கேள்வி ஞானம் போதாதா?
தர்பாரி கானடாவில் எந்தப் பாட்டு முதலில் என் காதுகளில் விழுந்திருக்கும்? மதுரை சோமு பாடிய ‘மருதமலை மாமணியே’ பாட்டாகத்தான் இருக்க வேண்டும். வித்யாசாகர் பாணியிலான கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ‘மைசூர் பா’ அல்ல அது. இதயத்தைக் கலங்கடிக்கும் ஓலம். ஹிந்துஸ்தானி பாடகரான உஸ்தாத் படே குலாம் அலிகானின் தீவிர ரசிகரான மதுரை சோமு, அவரது பாணியிலேயே தர்பாரியைப் பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
எந்தெந்தத் திரைப்பாடல், எந்தெந்த ராகம் என்று இசையின் அறிமுகப் பாடத்தைப் போதிக்க சாருலதா மணி போல பல இசையாளுமைகள் இன்று முன்வந்திருப்பது என்னைப் போன்ற கேள்வி ஞானங்களுக்கு நல்லதொரு வழிகாட்டல். ஒரே ராகத்திலான திரைப்பாடல்களைக் கேட்பது இன்று எல்லோருக்கும் கிடைக்கும் எளிய வாய்ப்பாகிவிட்டது. எனவே, திரைப்படப் பின்னணி இசையில் நான் ரசித்த தர்பாரியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
1996-ல் மலையாளத்தில் வெளிவந்த ‘தேசாடனம்’ திரைப்படம், பள்ளியில் படிக்கும் ஒரு சிறுவனை, இளைய மடாதிபதியாகப் பட்டம் சூட்டுவதை கதைக்கருவாகக் கொண்டது. மிகப் பெரிய கதகளி ஆட்டக்காரர் என்று பெயரெடுக்க வேண்டும் என்று இளம்வயதில் ஆசைப்பட்டவர் அச்சிறுவனின் தாத்தா. அதற்கு அவர் தகுதியானவராக இருந்தும்கூட சூழல்களால் அவரின் ஆசை நிராசையாகிவிட்டது. பெருமைமிக்க வாழ்வு தனது பேரனுக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்பும் அவர், பேரனை சந்நியாசத்துக்கு அனுப்பச் சம்மதிக்கிறார். அவரது பேச்சைத் தட்ட முடியாமல் சிறுவனின் பெற்றோர்கள் தவிக்கிறார்கள். சந்நியாசம் ஏற்றுக்கொண்டு மடத்துக்குச் சென்ற சிறுவன், வீட்டை மறக்க முடியாமல் ஒருநாள் இரவு அங்கிருந்து தப்பித்து ஓடிவருகிறான். பெற்றோர்கள் கலக்கத்தோடு மீண்டும் அவனை மடத்துக்கு அனுப்பிவைக்கிறார்கள்.
இலக்கியப் படைப்புகளை, தொடர்ந்து திரையாக்கம் செய்துவரும் இயக்குநர் ஜெயராஜ், உணர்வின் இழைகளாலேயே இந்தப் படத்தை நெய்திருக்கிறார். அந்த உணர்விழைகளைப் படத்தின் பின்னணி இசையாக ஒலிக்கும் தர்பாரியில் நமக்குள்ளும் கடத்திவிடுவார் இசையமைப்பாளர் கைதப்புரம் தாமோதரன்.
அந்தச் சிறுவன் இளைய மடாதிபதியாகப் போவதை அறிந்து உடன் விளையாடும் சிறுவர்கள் மிரட்சியில் விரண்டோட குளக்கரைப் படிக்கட்டுகளில் தனியனாய் நிற்கையில்... குடும்பத்தினருடனான கடைசிச் சாப்பாட்டில்... குடும்பத்தைப் பிரிந்து தந்தையுடன் மடத்துக்குக் கிளம்புகையில்... சந்நியாசம் பூண்டு துவராடை தரித்துவிட்ட பின்பு தாயாரைச் சந்திக்கையில்... அவள் தனது மகனின் கால்களில் விழுந்து வணங்குகையில்... பெண்களை மடத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற வழக்கத்தின் காரணமாக அவள் மகனைச் சந்திக்க முடியாமல் கலங்கிநிற்கையில்... மடத்திலிருந்து ஓடிவந்த இளம்துறவியைக் கண்டு மொத்தக் குடும்பமும் பதறிப்போய் திரும்பிச் சென்றுவிடுமாறு வேண்டுகையில்... என்று படம் நெடுகிலும் பின்னணியில் வீணையின் தந்திகளில் தர்பாரி ஒலித்தபடியே இருக்கும்.
‘மிகுந்த தனியனின்/ கவிந்த மென்னழுகை/ சமுத்திரங்களை/ வறட்சித்துவிடுகிறது’ என்பது பாலைநிலவனின் கவிதை வரிகள். அந்தக் கவிந்த மென்னழுகை, தர்பாரியாகத்தான் இருக்க வேண்டும்.
(வெள்ளிக்கிழமை சந்திப்போம்)