கமலைக் காப்பாற்றிய அருமருந்து எது?


கரோனா பாதிப்பிலிருந்து முழுமையாகக் குணமான நடிகர் கமல்ஹாசன், மருத்துவமனையிலிருந்து நேராக பிக் பாஸ் தளத்துக்குச் சென்றது நம்பிக்கையளிக்கும் செய்தியாகப் பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் போன்றோருடன் இணைந்து கமல் நடித்துவரும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பும், மீண்டும் தொடங்கிவிட்டது என்கிறார்கள். பிக் பாஸ் தளத்தில் இருந்தபோது சற்றே களைப்படைந்ததால், கமல் வீடு திரும்பிவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகின.

அதேவேளையில், கரோனா தொற்றுக்குள்ளான கமல் எப்படி சிகிச்சைக்குப் பின்னர் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல், பொதுவெளிக்குச் சென்றார் எனப் பலருக்கும் ஆச்சரியம். விரைவில் அவர் குணமடைந்து திரும்பிவிட்டாலும், தொற்றுப் பரவல் அபாயம் மற்றவர்களுக்கு இருக்காதா என்றும் கேள்விகள் எழுகின்றன. சாமானியர்களுக்கு இது சற்று அதிசயமாகத் தெரிந்தாலும், மருத்துவத் துறையினருக்கு இது இயல்பான விஷயம்தான்.

ஆம்! இப்போதெல்லாம் கரோனா சிகிச்சை விரைவாகவும், தனிமைப்படுத்திக்கொள்வதற்கான அவகாசம் குறையும் வகையிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. அதன் நல்விளைவாகத்தான் கமல் போன்ற ஆளுமைகள் பெருந்தொற்றிலிருந்து வெளியேறி கலைப் பணிகளைத் தொடர முடிகிறது.

இதுகுறித்து, புகழ்பெற்ற மருத்துவரும், மருத்துவம் சார்ந்த கட்டுரைகளை எளிய தமிழில் எழுதிவருபவருமான கு.கணேசனிடம் பேசினோம்.

“இப்போதெல்லாம் கரோனா சிகிச்சைக்குத் தேவைப்படுவது இரண்டே வாரங்கள்தான். ‘ரீஜென்-கோவ் 2’ எனும் ஊசி கரோனா தொற்றாளர்களுக்குச் செலுத்தப்படுகிறது. இதை மோனோக்ளோனல் ஆன்டிபாடி (monoclonal antibodies) என்பார்கள். கடந்த வருடம், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் இந்த ஊசி செலுத்திக்கொண்டதாகச் செய்திகள் வெளியாகின அல்லவா! அன்றைய தேதிக்கு அதன் விலை 1.50 லட்சம் ரூபாய். இன்றைக்கு அது 1.10 லட்சம் ரூபாய். அதுதான் இப்போது பலரையும் பெருந்தொற்றிலிருந்து விடுவிக்கிறது. முன்பெல்லாம் ரெம்டிசிவர் மருந்து செலுத்தப்பட்டது. அந்த இடத்தை இந்த மருந்து பிடித்திருக்கிறது. ரெம்டிசிவரும் பயன்பாட்டில் இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்ததை அடுத்து மோனோக்ளோனல் ஆன்டிபாடி பரவலான பயன்பாட்டுக்கு வந்துவிட்டது - இந்தியா உட்பட! ரெம்டிசிவர் என்றால் 5 ஊசிகள் செலுத்த வேண்டும். அதற்குத் தலா 10,000 ரூபாய் என மொத்தம் 50,000 ரூபாய் செலவாகும். ஆனால், இது ஒரே ஊசி போதும்!” என்றார் கணேசன்.

மருத்துவர் கு.கணேசன்

ஆனால், இவ்வளவு விலை உயர்ந்த மருந்து தனியார் மருத்துவமனைகளில் மட்டும்தானே கிடைக்கும் என்று கேட்டால், அரசு மருத்துவமனைகளுக்கும் இந்த மருந்து வந்துவிட்டது என்கிறார் கணேசன். மேலும், “இந்த மருந்துக்கு அரசு மருத்துவமனையிலும் கட்டணம் தேவையில்லை. அரசே அதற்கான நிதியை வழங்கியிருக்கிறது. இந்த ஊசி செலுத்தப்பட்டு ஒரே வாரத்தில் குணமாகிவிடலாம். அடுத்த ஒரு வாரம் மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்துதல், கண்காணிப்பு முடிந்து நிம்மதியாக வெளியில் வந்து வேலையைத் தொடரலாம்” என்று சொன்ன கணேசன், “மிக முக்கியமாக, அறிகுறி தெரிந்த முதல் வாரத்திலேயே மருத்துவமனைக்குச் சென்றால்தான் இந்த மருந்து செலுத்தப்பட்டு, உரிய பலனைப் பெற முடியும்” என்றும் குறிப்பிட்டார். சரி, கரோனா தொற்றிலிருந்து குணமாகிவிட்டாலும் நேராக வெளியில் சென்றால், மற்றவர்களுக்குத் தொற்றுப் பரவும் அபாயம் இருக்குமா? இல்லை என்கிறார் கணேசன். “அதேவேளையில் உரிய ஓய்வும் அவசியம். அப்போதுதான் களைப்பு ஏற்படாது” என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

இதையெல்லாம்விட முக்கியம், இப்போது உலகை மிரட்டிக்கொண்டிருக்கும் ஒமைக்ரான். அதற்கு மோனோக்ளோனல் ஆன்டிபாடி மருந்து கைகொடுக்குமா? “நிச்சயமாக! இதுதான் கரோனாவின் எல்லாப் பிறழ்வு வைரஸ்களுக்கும் ஒரே நிவாரணி” என்று நிம்மதியான செய்தியைச் சொல்கிறார் கணேசன்.

ஆம், பதற்றம் அடையாமல் பணியைச் செய்வோம். அதேவேளையில், கரோனா கட்டுப்பாடுகளையும் கைவிடாமல் பின்பற்றுவோம்!

x