எஸ்சி, எஸ்டி மாணவர் கல்வித் தொகையில் ரூ.17 கோடி முறைகேடு புகார்


சென்னை, தம்பு செட்டித் தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் அசோக்குமார் 2018-ம் ஆண்டில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில் 2011 முதல் 2014 ஆண்டுகளில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கல்வித் தொகையில் சுமார் ரூ.17 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த முறைகேடு குறித்து, சிறப்புத் தணிக்கை அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சுமார் 52-க்கும் மேற்பட்ட கலை அறிவியல், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட கல்லூரிகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும் இதில் தொடர்புடைய உயர் கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இப்புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்ந்த மாணவர்கள், எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கல்வி உதவித் தொகையில் ரூ.4,34,48,000 முறைகேடு நடந்திருப்பதாகவும், பெரம்பலூரில் இல்லாத கல்லூரிக்கு ரூ.58,70,640 அரசால் ஒதுக்கப்பட்டதும் தெரியவந்தது.

ஒரே மாணவருக்கு, ஒரே கல்வி ஆண்டில் பலமுறை கல்வி உதவித் தொகை முறைகேடாக கொடுத்ததன் அடிப்படையில் ரூ.38,27,486 முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல் ஒரே மாணவனுக்கு, வெவ்வேறு அடையாள அட்டையை அடிப்படையாக வைத்துப் பலமுறை எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான உதவித் தொகை ரூ.13,49,200, மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கல்வித் தொகையை கல்லூரிப் பயன்பாட்டுக்காக பயன்படுத்தி ரூ.24 லட்சம், எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்குப் பதிலாக மற்ற பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.14,32,412 கல்வி ஊக்கத் தொகை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

அத்துடன் மாணவரல்லாத நபருக்கு, ஒரு லட்ச ரூபாய் கல்வி உதவித் தொகை கொடுத்தது, பிற மாநில மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.18,27,395 ஒதுக்கி முறைகேட்டில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கல்வித் துறையில் அளிக்கப்பட்டதற்கான எந்த ஆவணமுமின்றி ரூ.10,45,895 முறைகேடு எனப் பலவிதங்களில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கல்வி உதவித் தொகையில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்துள்ளது தெரியவந்தது.

இந்த முறைகேடுகளில் பல பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள், பயிற்சிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களும், உயர் கல்வித் துறை அதிகாரிகளும், ஆதி திராவிட பழங்குடியின துறை அதிகாரிகளும் தொடர்பு கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தப் புகாரில் தொடர்புடைய 52 கல்லூரி முதல்வர்கள், கல்லூரிக் கல்வித் துறையின் 7 இணை இயக்குநர்கள், ஆதி திராவிட பழங்குடியின துறையில் பணியாற்றிய 11 அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

போலீஸார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பெயர் குறிப்பிடப்படாத உயர் கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவுசெய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

x