இந்திய மக்களிடம் எந்த அளவு உதவும் எண்ணமும், மனிதாபிமானமும் உள்ளது என்பதை அறிய, பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சைக்கிளிலேயே சுற்றுப்பயணம் புறப்பட்டிருக்கிறார்.
பெங்களூரு, தசரஹல்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய் தேஜா(26). இவர் டிப்ளமோ படித்துவிட்டு தனியார் உணவக விநியோக ஊழியராகப் பணியாற்றி வருவதுடன், யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
ஒருநாள் சாய்தேஜாவுக்குள் திடீரென ஒரு கேள்வி எழுந்தது. அது, இந்திய மக்களிடம் மனிதாபிமானமும், உதவும் எண்ணமும் எந்த அளவுக்கு உள்ளது என்பதுதான். இதற்கு விடை தேடி அலைந்த சாய்தேஜா, அதற்கான தீர்வைக் கண்டறிந்தார். அதன்படி இந்தியா முழுதும் சைக்கிளில் சென்று மக்களின் எண்ணத்தை ஆய்வு செய்ய திட்டமிட்டார்.
அதற்குப் பணம் தேவை என்பதை உணர்ந்த சாய்தேஜா, கடினமாக உழைத்து ரூ.30 ஆயிரம் சேமித்தார். அதில் ரூ.10 ஆயிரத்துக்கு சைக்கிள் ஒன்றும், ரூ.10 ஆயிரத்தில் பயணத்துக்கு தேவையான உபகரணங்களை வாங்கினார். மீதியுள்ள ரூ.10 ஆயிரத்தை வழிச்செலவுக்கு எடுத்துக்கொண்டு, கடந்த அக்.2-ம் தேதி சைக்கிளில் தனது பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்.
கடந்த 55 நாட்களில் தமிழகத்தில் கொடைக்கானல், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, சிவகங்கை உட்பட 2,600 கி.மீ வரை பயணித்துள்ளார்.
இந்நிலையில், இன்று சென்னை வந்த சாய்தேஜா, தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை சந்திக்க முயன்றார். ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
இதுகுறித்து சாய் தேஜா கூறும்போது, “14 மாதங்களில் இந்தியாவைச் சுற்றிவர திட்டமிட்டுப் புறப்பட்டேன். தமிழகத்தைச் சுற்றிப்பார்க்கவே 55 நாட்கள் ஆகிவிட்டது. இந்தியா முழுதும் செல்ல கூடுதலாக 4 மாதங்கள் ஆகலாம் என நினைக்கிறேன். இரவு நேரங்களில் பெட்ரோல் பங்க், திருமண மண்டபங்களில் தங்கி சமையல் செய்து சாப்பிடுவேன்” என்றவர், தான் கொண்டு வந்த பணம் பெருமளவு தீர்ந்துபோனதாகச் சொன்னார்.
பயணத்தைத் தொடர பணம் தேவைப்பட்டதால், மொத்தமாக முகக்கவசங்களை வாங்கி வைத்துக்கொண்டு செல்லும்வழியில் ஒரு முகக்கவசம் ரூ.5 என விற்றுப் பணம் திரட்டியதாகத் தெரிவித்தார்.
“தஞ்சாவூர் மாவட்டம் பூம்புகாருக்குச் சென்றபோது சைக்கிளின் செயின் அறுந்துவிட்டது. கையில் பணமில்லாமல் தவித்தேன். அப்போது அவ்வழியாக வந்த முதியவர் ஒருவர் என்னை விசாரித்து, மனிதாபிமானத்துடன் 1,200 ரூபாய் கொடுத்து உதவி செய்தார். என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய அந்தப் பெரியவரின் வடிவில் தமிழக மக்களிடம் மனிதாபிமானம், உதவும் எண்ணம் இருப்பதை உணர்ந்தேன். எனது உறவினர்கள் கேலி பேசினாலும், நான் லட்சியத்தை மாற்றிக் கொள்ளாமல் இந்தப் பயணத்தை தொடங்கித் தொடர்கிறேன்” என்றார் சாய் தேஜா.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சைக்கிளிங் செல்லும் வீடியோவை யூடியூபில் பார்த்து வியந்ததாகவும், அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் டிஜிபி அலுவலகத்துக்கு வந்ததாகவும், முறையான நேர்காணல் அனுமதி இல்லாததால் தன்னைக் காவலர்கள் அனுமதிக்கவில்லை என வருத்தம் தெரிவித்த சாய் தேஜா, மனிதர்களிடையே மனிதாபிமானத்தைத் தேடும் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.