ஏனெனில் - 20: பாலகுமாரனின் ‘சோற்றுக்கணக்கு’!


எழுத்தாளர் பாலகுமாரன்

தஞ்சைப் பெருவுடையார் கோயில் விமானத்தைப் பார்க்கும்தோறும் ஏதாவது நினைவுக்கு வந்துவிடும். இந்த முறை, பாலகுமாரனின் ‘கடலோரக் குருவிகள்’. கோயிலிலிருந்து வரும் மூன்று பட்டை வெண்சோற்றுக்காகக் காத்திருக்கும் ஒரு ஏழை பிராமணக் குடும்பத்தின் கதை. இரண்டு பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அந்தச் செலவுகளைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் கடனில் தத்தளிக்கும் குடும்பம்.

இப்படியொரு சூழலில் வளரும் அந்த வீட்டு இளைஞன் மாதவனின் பார்வையில் நகர்கிறது ‘கடலோரக் குருவிகள்’. மாதவனுக்கு ஒரு வேலை கிடைத்துவிட்டால் மீண்டுவிடுவோம் என்ற வயதான பெற்றோர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். பி.எஸ்சி தாவரவியல் படிப்பு அவனுக்குக் கைகொடுப்பதாய் இல்லை. வயிற்றுப் பசியைக்கூட தீர்க்காத படிப்பு எதற்கு என்ற கவலை நாவலைப் படிக்கிற நம்மையும்கூட தொற்றிக்கொள்ளும்.

ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதை வரிசையில் ஒன்றான ‘சோற்றுக்கணக்கு’ படித்தபோது, எனக்கு பாலகுமாரனின் மாதவன்தான் நினைவில் நின்றான். அறுபது எழுபதுகளில், திருவனந்தபுரம் சாலை பஜாரில் கல்லூரி மாணவர்களுக்குக் கணக்குப் பார்க்காமல் கறிச்சோறு போட்ட கெத்தேல் சாகிப்பின் கதை அது. சாப்பாட்டுக்கு அவர் காசு வாங்குவதில்லை. தட்டியால் மறைத்து வைக்கப்பட்டுள்ள உண்டியலில், சாப்பிட்டவர்கள் காசு போட்டுப் போவார்கள். யார் என்ன போட்டாலும் போடாவிட்டாலும் யாருக்கும் தெரியாது. எத்தனை முறை சாப்பிட்டாலும் காசு போடாமல் போனாலும் அவர் கணக்கு கேட்பதில்லை.

ரைஸ் மில்லில் கணக்குப்பிள்ளையாக வேலை பார்க்கும் ஒருவர் தனது மகனைத் திருவனந்தபுரம் கல்லூரியில் சேர்த்துவிடுகிறார். ஒற்றை வேட்டியுடன் செருப்பில்லாத கால்களோடு கல்லூரியில் சேரும் அந்த இளைஞன், உறவினர் வீட்டில் கூலியில்லாத வேலைக்காரனாக இருந்தும் அவனுக்குக் கிடைப்பது இரண்டு வேளை பழைய சோறும் ஊறுகாயும்தான். கல்லூரி கட்டணத்துக்காக அவனும் அப்பனைப் போலவே கணக்குப்பிள்ளையாகிறான். மாதவனைப்போல கோயில் பிரசாதங்களுக்கு அலைந்துகொண்டிருந்த அவன் நாவில் கறி, மீன்களின் சுவையைக் காட்டியது கெத்தேல் சாகிப்பின் கருணை. கணக்குப் பார்க்காமல் சாப்பாடு போடும் கை.

எழுத்தாளர் ஜெயமோகன்

‘சோற்றுக்கணக்கு’ கதையில் வரும் அந்த இளைஞன், ஜெயமோகனின் ‘லங்காதகனம்’ கதையில் ஏற்கெனவே எனக்கு அறிமுகமானவன்தான். அச்சன் மடத்தில் தங்கியிருந்து, அங்கு கிடைக்கும் சாப்பாட்டுக்காக எடுபிடி வேலைகள் பார்த்தபடி எகானமிக்ஸ் படிக்கும் கல்லூரி இளைஞனாக அவனை நான் நன்கறிவேன். அடிவயிற்றில் எரியும் பசித் தீ ஆயிரம் இலங்கைகளையும் எரிக்கவல்லது.

கோவை சூலூரில் வசிக்கும் புலவர் செந்தலை ந.கவுதமன் தஞ்சையைச் சேர்ந்தவர். திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் படித்தவர். கல்லூரியில் என் தந்தைக்கு இளையர். அவருடனான ஒரு உரையாடலில், எந்தைக்கும் அவருக்கும் பொதுவான கல்லூரி நண்பர் ஒருவரைப் பற்றிய நினைவைப் பகிர்ந்துகொண்டார். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அந்நண்பர் தனித் தமிழ் இயக்கத்தின் முதன்மைப் படைவீரர். எழுபதுகளில் திருவையாறு அரசர் கல்லூரி அருகில் அய்யரம்மா மெஸ் ஒன்று இருந்ததாம். மதியச் சாப்பாடு 75 பைசா. மாதம் ஒருமுறை அந்நண்பர் மதியச் சாப்பாட்டைத் தவிர்த்துவிட்டு நண்பர்களின் அறையிலேயே தங்கிவிடுவார். காரணம், பெருஞ்சித்திரனாரின் ‘தென்மொழி’ இதழின் விலை அப்போது 75 பைசா. இளமையில் வறுமை கொடிதெனினும் வறுமை செம்மைக்கும் வழிவகுக்கும்.

கடைசியாக நான் தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்குச் சென்றது கரோனா காலத்துக்கு முன்பு. மதிற்சுவரை ஒட்டி நீளும் பிரகாரத்தில் தூண்களின் நடுநடுவே இருபது முப்பதுகளில் உள்ள இருபால் இளைஞர்களும் குனிந்த தலை நிமிராமல் தங்களின் மடி மீதிருந்த புத்தகங்களில் ஆழ்ந்திருந்தார்கள். அனைத்தும் வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கான பாடநூல்கள். கோயில் விமானத்தைச் சுற்றிவரும் கடலோரக் குருவிகளோ?

(திங்கள்கிழமை சந்திப்போம்)

x