சிறையில் இருக்கும் தந்தையைப் பார்க்க தாயையும் அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன், லாரி மீது மோதிய விபத்தில் உயிரிழந்தார்.
சென்னை, கேகே நகர் டபுள் டேங்க் சாலையைச் சேர்ந்தவர் ராமையா. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி தேவி(40) என்ற மனைவியும், 16 வயது மகனும் உள்ளனர். ராமையாவின் மகன், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நிலமோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ராமையாவை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று காலை சிறுவன் தனது தாய் தேவியை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு, புழல் சிறையில் உள்ள தந்தை ராமையாவைப் பார்ப்பதற்காகச் சென்றார். புழல் - மாதவரம் புறவழிச் சாலை அருகே வரும்போது, சாலையில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது சிறுவன் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சிறுவன், தன் தாய் தேவியின் கண்முன்னேயே துடிதுடித்து உயிரிழந்தார். தேவி பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்து வந்த மாதவரம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் சிறுவன் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த தேவியை மீட்டு, சிகிச்சைக்காக அயனாவரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தேவிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திய போக்குவரத்துப் போலீஸார், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குணசேகரன்(39) என்பவரைக் கைது செய்தனர்.
சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என்று எச்சரிக்கை விடுக்கும் போலீஸார், அதனால் ஏற்படும் விபத்துகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். ஆனால் அதையும் மீறி சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளை (சிறாரை) கார், பைக் போன்ற வாகனங்களை ஓட்ட அனுமதிக்கின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்பு தங்களுக்கு மட்டுமின்றி, சக வாகன ஓட்டிகளுக்கும் என்பதைப் பெற்றோர்கள் உணர்ந்து செயல்படவேண்டும் என்று போலீஸார் அறிவுறுத்துகின்றனர்.