வரிகள், வாக்கியங்கள் என்று அசைபோடும் மனதுக்குச் சமயங்களில் வார்த்தைகளே போதுமானதாக இருக்கிறது. இப்போது மனசு மையமிட்டு நிற்பது ‘கடிதம்’ என்ற வார்த்தையை. ‘அன்புள்ள மான் விழியே’ தொடங்கி ‘வந்ததா வசந்தம் வந்ததா’, ‘நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா’, ‘வானின் நீலம் கொண்டுவா, பேனா மையோ தீர்ந்திடும்’ என்ற பாடல் வரிகளும் வைக்கோற்போர் தொடங்கி ராஜஸ்தான் கோட்டைகள், நயாகரா நீர்வீழ்ச்சி என்று காட்சிப் பின்னணிகளும் நாயகியர்தம் நடன அசைவுகளும் நினைவில் வந்துபோகின்றன.
காதலர்களுக்கு இன்று கடிதம் தேவையில்லை. ஒரு செல்பேசி போதும். எழுதலாம். பேசலாம். காணவும் களிக்கவும் செய்யலாம். அலுவல் ரீதியில் கடிதத்தின் பயன்பாடு இன்னும் சில காலத்துக்கு நீடிக்கும். கடிதம் என்ற வார்த்தைக்குப் பதிலாக அஞ்சல் என்ற வார்த்தையும் பயன்பாட்டில் இருக்கிறது. பதிவஞ்சல், விரைவஞ்சல் ஆகிய வார்த்தைகளும் வழக்கத்தில் இருக்கின்றன. 'கடிதம்' என்கிறபோதே அதில் விரைவு என்று ஓர் உட்பொருளும் அடங்கியிருக்கையில் விரைவஞ்சல் என்று ஏன் வார்த்தைகளை இணைத்துப் புது வார்த்தையை உருவாக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
ஆங்கில வார்த்தையான ‘மாஸ்க்’ என்பதற்கு ‘முகமூடி’ என்ற வார்த்தையைத்தான் இரண்டாண்டுகளுக்கு முன்புவரை பயன்படுத்திவந்தோம்.
கடிதெனின் விரைவென்று காலம்காலமாய் பொருள்கொள்ளப்பட்டு வருகிறது. வள்ளுவரும் ‘கடிதோச்சி மெல்ல எறிக’ என்கிறார். ‘கைகளை வேகமாக ஓங்கி மெதுவாக அடி’ என்பது அவரது உபதேசம். கடிதோச்சி என்பதற்கு, ‘ஒறுத்தல் தொடங்குங்கால் அளவிறப்பச் செய்வார்போல் தொடங்கி’ எனப் பதவுரை சொல்கிறார் பரிமேலழகர். அவரே, ‘மெல்ல எறிக’ என்பதற்கு, ‘செய்யுங்கால் அளவிறாமல் செய்க’ என்று பொருளுரைக்கிறார். இப்போது கவனம், கடிதத்தை விட்டு ‘இறப்பு’ என்ற வார்த்தையில் ஒட்டிக்கொண்டுவிட்டது.
நறுமணத்தைக் குறித்த ‘நாற்றம்’ என்ற சொல் இப்போது துர்க்கந்தத்தைக் குறிப்பதுபோல, இடக்கரடக்கலாகச் சொன்ன ‘இறப்பு’ அமங்கலமாகிவிட்டது. ‘இறந்துவிட்டார்’ என்ற வார்த்தையைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக காலமானார் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். ஆனால், காலமாகிவிட்டார் என்பதைத்தான் இறந்தார் என்ற வார்த்தையும் குறிக்கிறது.
‘ஒளியொருவற்கு உள்ள வெறுக்கை...’ எனத் தொடங்கும் குறளுக்குப் பரிமேலழகரின் உரையைப் பிழையெனச் சுட்டும் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம், அக்குறளின் அஃதிறந்து என்னும் சீருக்கு இப்படி விளக்கம் அளிக்கிறார்:“ ‘இறந்து’ என்ற பதத்திற்கு ‘அளவு கடந்து’ அல்லது ‘எல்லை கடந்து’ என்பதுதான் பொருள். ‘இறந்து’ என்பது, ‘செத்துப்போய்’ என்று மரணத்தைக் குறிக்கிறபோதும் அதற்கு, ‘ஆயுள் காலத்தின் எல்லை கடந்து’ என்பதுதான் பொருள். அதிலிருந்துதான் ‘இல்லாமற்போய்’ என்று மரணத்தைக் குறிக்கிற அர்த்தம் கொள்ளப்படுகிறது.” (திருக்குறள் திடுக்கிடுவார், 1954)
இறப்பு இன்று கரோனாவுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருக்கிறது. 2 நாட்களாய் ‘ஒமிக்ரான்’ என்ற வார்த்தையும் சேர்ந்துகொண்டுவிட்டது. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் முகக்கவசத்தோடு திரிய வேண்டுமோ?
ஆங்கில வார்த்தையான ‘மாஸ்க்’ என்பதற்கு ‘முகமூடி’ என்ற வார்த்தையைத்தான் இரண்டாண்டுகளுக்கு முன்புவரை பயன்படுத்திவந்தோம். முகத்தை மூடி அடையாளத்தை மறைத்துக்கொள்வதைக் குறித்துவந்த அந்த வார்த்தை இன்று, மூக்கையும் வாயையும் பொத்தி உயிரைப் பாதுகாத்துக்கொள்வதைக் குறிக்கும் முகக்கவசமாகிவிட்டது. தவிர, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்‘கவசம்’ வேறு. ‘ஹெல்மெட்’ அறிமுகமானபோது தமிழில் அதை ‘காப்புத் தொப்பி’ என்ற பெயரால் அழைத்ததும் நினைவுக்கு வருகிறது.
கவசம்… கவசம்… ‘எங்கே என் ஜீவனே’ என்று மனதுக்குள் ஒரு பாட்டு கேட்டுக்கொண்டிருக்கிறது. பேயாய் உழலும் சிறுமனமே… அடங்கு!
(வெள்ளிக்கிழமை சந்திப்போம்)