ஏனெனில் - 18: பருவநிலை மாற்றத்தைப் பேசும் பசுமை சினிமா!


‘ஃபிஃப்டி ஸ்டெப்ஸ்’ ஆவணப்படத்திலிருந்து...

உலகின் பல நாடுகளிலும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் ஐரோப்பிய ஒன்றிய திரைப்படத் திருவிழா, இந்த ஆண்டு நடத்தப்படவில்லை. என்றாலும், இந்த ஆண்டு விழாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களை இணையத்தின் வழியாகப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்திய ரசிகர்கள், நவம்பர் மாதம் முழுமையும் ஏறக்குறைய 60 திரைப்படங்களை இணையத்தின் வழியாக இலவசமாகப் பார்க்கலாம்.

ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியாவிலும் கடந்த ஆண்டு வெளியான சிறந்த திரைப்படங்கள், அதேபோல ஐரோப்பிய மற்றும் இந்திய திரைப்பட முன்னோடிகளின் திரைப்படங்கள், குறும்படங்கள் ஆகியவற்றுடன் பருவநிலை மாற்றத்தைப் பேசும் பசுமை சினிமாக்களும் இவற்றில் உள்ளடக்கம். கிளாஸ்கோ பருவநிலை மாநாடு, அங்கு எட்டப்பட்ட உடன்பாடுகள் குறித்து உலகெங்கும் விவாதிக்கப்பட்டுவரும் நிலையில், திரைப்பட விழாக்களிலும் பருவநிலை மாற்றம் குறித்து பேசப்படுவது பொருத்தமானது.

பசுமை சினிமா பிரிவில் ‘ஃபிஃப்டி ஸ்டெப்ஸ்’ என்ற தலைப்பிலான விவரணப்படம், மலையேற்ற வீரரான மிஷேல் குக்கியின் அனுபவங்களைப் பற்றிப் பேசுகிறது. உலகின் 2-வது மிகப் பெரிய மலைச்சிகரமான ‘கே2’-வில் அவரது மலையேற்ற அனுபவம், காரகோரம் மலைத்தொடரின் இதரச் சிகரங்களில் அவர் மேற்கொள்ளும் தூய்மைப் பணிகள் ஆகியவற்றைப் படம்பிடித்துள்ளது.

மலையேற்ற வீரர்களுக்கு வழிகாட்டியாகப் பணியாற்றும் பகுதிகளில், சுற்றுலாப் பயணிகளால் எறியப்படும் குப்பைகளைச் சேகரிப்பதையும் தனது கடமைகளில் ஒன்றாகக் கொண்டிருப்பவர் மிஷேல். அவரது பனிமலைப் பயணங்களில் சில சமயங்களில் பனிப் பாறைகளில் சிக்கி இறந்துபோனவர்களின் உடைகள் கிடைக்கின்றன. அந்த உடைகளுக்குள் அவர்கள் பயன்படுத்திய பயணப் பைகளும் மலையேற்ற உபகரணங்களும் கிடைக்கின்றன. சில சமயங்களில் சிதைந்த நிலையில் உடல் சிதிலங்களும், எலும்புக்கூடுகளும்.

காரகோரம் மலைச் சிகரங்களில் மட்டும் கடந்த சில பத்தாண்டுகளில் நடந்த விபத்துகளில், 500 பேர் வரையிலும் இறந்துள்ளதாகக் கூறுகிறார் மூத்த வழிகாட்டியொருவர். பத்தாண்டுகளுக்கு முன்பு பனிப்பாளங்களால் நிறைந்திருந்த பகுதிகள் பலவும் இன்று வெறும் பாறைகளாக நிற்கின்றன. பல தசாப்தங்களுக்கு முன்பு பனிப்பாளங்களில் சிக்குண்டவர்கள் விட்டுச்சென்ற பொருட்கள், இன்று கற்குவியல்களுக்கிடையே தலைநீட்டிப் பார்க்கின்றன.

மலையேற்றப் பயணங்களின் சாகசங்கள் ஒருபுறமிருக்க, கடந்த சில பத்தாண்டுகளாக மலைச் சிகரங்களைப் போர்த்தியுள்ள பனிப்பாளங்கள் தொடர்ந்து சரிந்துவிழுவதன் சாட்சிகளாகவும் மிஷேல் குக்கி போன்ற வழிகாட்டிகள் இருந்துவருகிறார்கள். மலைகளின் முகடுகளைப் பனிபோர்த்தியிருக்கும் வரைதான், ஆற்றுச் சமவெளி மனிதர்கள் உணவு உற்பத்தித் தொழிலில் நிம்மதியாக ஈடுபட முடியும். கடற்கரை நகரங்களில் வாழ்பவர்களும் எதிர்காலம் குறித்த அச்சமின்றி வாழமுடியும் என்ற எச்சரிக்கையை விடுக்கிறது ‘ஐம்பது காலடிகள்’.

‘ஜர்னி டூ உட்டோபியா’ திரைப்படக் காட்சி...

பருவநிலை மாற்றத்தின் அபாயங்களிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள, வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை உணர்த்துகிறது ‘ஜர்னி டூ உட்டோபியா’ என்ற திரைப்படம். டென்மார்க்கில் உள்ள ஒரு சூழலியல் கிராமத்துக்குக் குடிபெயர விரும்பும் நார்வே குடும்பத்தைப் பற்றிய ஆவணப்படம் இது. திரைப்பட இயக்குநரான எர்லண்ட், பாப் இசைப் பாடகியான தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடனான வாழ்க்கைப் பயணத்தை விவரிப்பதாக இந்தப் படம் அமைந்துள்ளது.

தங்களுக்குத் தேவையான காய்கறிகளையும் உணவையும் தாங்களே விளைவித்துக்கொள்வது, பயன்படுத்திய தண்ணீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துவது, தேவையான மின்சக்தியையும் தாங்களாகவே உற்பத்தி செய்துகொள்வது என்று தற்சார்பு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள், சூழலியல் கிராமம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் விருப்பங்கள் உயர்வானதாக இருந்தாலும் அதன் நடைமுறை சாத்தியங்கள் மலைப்பை ஏற்படுத்துபவையாக உள்ளன. எதிர்பார்த்த காலத்துக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க முடியவில்லை. வீட்டு வேலைகள் தாமதமாவதால் சில பேர் கோபப்படவும் செய்கிறார்கள். இதற்கிடையில், தற்காலிகமாக அடிக்கடி வீடுகள் மாறி மாறி கடைசியில், வீடு கட்டும் பணிகள் முடிவதற்கு முன்பே சூழலியல் கிராமத்துக்கு இடம்பெயர்கிறார்கள் எர்லண்டும் அவரது குடும்பமும். முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத வீடுகளில் புதிய வாழ்க்கையைத் தொடங்குகின்றனர்.

மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவராக இருந்தாலும், தனது தந்தை கட்டிய பண்ணை வீட்டைப் பிரிவதற்கு எர்லண்ட் விரும்பவில்லை. கிராமத்துக்குக் குடிபெயர்ந்தவர்கள் தற்சார்பு வாழ்க்கைக்காக வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாகவே செலவுசெய்ய வேண்டியிருப்பதைச் சொல்லி வருத்தப்படவும் செய்கிறார்கள். இந்த முரண்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கிச் சூழலியல் கிராமம் தனது நோக்கத்தை எட்டிவிடுகிறது. அங்கு வாழும் குடும்பத்தினர் தங்களுக்கு வேண்டிய உருளைக்கிழங்குகளைத் தாங்களே பயிரிட்டுக்கொள்ளத் தொடங்குகிறார்கள். குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கான செலவுகளைப் பற்றி ஒன்றாகக் கூடி விவாதிக்கிறார்கள்.

'காடன்’ திரைப்படக் காட்சி...

இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை என்று ஹென்றி டேவிட் தோரோ பரீட்சித்துப் பார்த்த ‘வால்டன்’ வாழ்க்கையையும், அவர் வழியில் காந்தியடிகள் முயற்சித்த டால்ஸ்டாய் பண்ணையையும் டென்மார்க்கின் சூழலியல் கிராமமான ‘பெர்மடோபியா’வும் நினைவுக்குக் கொண்டுவருகிறது.

தமிழில், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தைப் பேசும் திரைப்படங்கள் முழுநீளக் கதைப்படங்களாகவே வெளிவருகின்றன. சமீபத்தில் வெளிவந்த ‘காடன்’ ஓர் உதாரணம். ‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்த ராணா, இந்தப் படத்தின் நாயகனாக நடித்திருந்தார். அவரது நடையில் ‘பிதாமகன்’ விக்ரமை மீண்டும் பார்க்க முடிந்தது. வனப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு விலங்குகளின் சாயல் வந்துவிடுமா என்ன? நமது இயக்குநர்களின் சமூக அக்கறைகள் சரியானதாக இருக்கலாம். ஆனால், அவர்களின் திரைப்படங்கள் எதார்த்தங்களிலிருந்து வெகுதூரம் விலகியே இருக்கின்றன.

ஜர்னி டூ உட்டோபியா படத்தின் ட்ரெய்லர்:

x