சென்னை, மதுரவாயல் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்வரன்(35). இவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நந்தினியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக, கடந்த சில நாட்களாக மருத்துவர் மகேஷ்வரன் பெரும் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை பணி முடித்து, ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் அறையெடுத்து தங்கியுள்ளார் மகேஷ்வரன். அப்போது, தனது மனைவி நந்தினியை வருமாறு அழைத்ததாகவும், அதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை அவர் பணிக்கு வராததால், சக மருத்துவர்கள் அவரைத் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து நண்பர்கள், மகேஷ்வரனின் கார் ஓட்டுநரிடம் விசாரித்து, தனியார் விடுதிக்குச் சென்று பார்த்தபோது, மகேஷ்வரன் தங்கியிருந்த அறைக்கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.
ஓட்டல் நிர்வாகத்தினர் வந்து அறையைத் திறந்தபோது, உள்ளே மருத்துவர் மகேஷ்வரன் சடலமாகக் கிடந்ததைக் கண்டு, உடனே போலீஸுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ராயப்பேட்டை போலீஸார், மகேஷ்வரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மகேஷ்வரனின் கையில் ஊசி போட்ட அடையாளம், அருகே சிதறிக் கிடந்த மாத்திரை, மருந்துகள் மற்றும் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை யாரையும் துன்புறுத்த வேண்டாம் என அவர் எழுதிய கடிதம் ஆகியவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவுசெய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகேஷ்வரன் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், பிரேதப் பரிசோதனைக்குப் பின்பே இறப்புக்கான காரணம் குறித்து உறுதியாகத் தெரியவரும்.
தனது இறப்புக்கு யாரும் காரணமில்லை என மகேஷ்வரன் எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளதால், இது தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.