சென்னை, யானைகவுனி காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலருக்கு வளைகாப்பு நிகழ்வை, காவல் நிலையத்திலேயே சக காவலர்கள் நடத்திவைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுப்ரியா(25). சென்னை, யானைகவுனி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். விஷ்ணுப்ரியாவுக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜெயேந்திரனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இப்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள விஷ்ணுப்ரியா, சொந்த ஊரான வேலூருக்குப் பயணம்செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், வளைகாப்பை எப்படி நடத்துவது என்று அவர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், விஷ்ணுப்ரியா தம்பதி மகிழ்ச்சி கொள்ளும்படியாக அவர்களின் வளைகாப்பு நடத்தப்பட்டது.
யானைகவுனி காவல் ஆய்வாளர் வீரக்குமார் தலைமையில், காவல் நிலையத்திலேயே விஷ்ணுப்ரியாவுக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இன்று(நவ.22) தேங்காய், பழம் உட்பட 15 சீர்வரிசை தட்டுகள் மற்றும் 5 வகையான உணவுகளுடன் யானைகவுனி காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் இணைந்து காவல் நிலையத்திலேயே விஷ்ணுப்ரியாவுக்கு வளைகாப்பை சிறப்பாக நடத்தினர். காவல் நிலையத்திலேயே உணவு சமைத்து அனைத்து காவலர்களுக்கும் பரிமாறப்பட்டது.
எங்க வீட்டுப் பெண்ணுக்கு எப்படி வளைகாப்பு செய்வோமோ, அதேபோல் விஷ்ணுப்ரியாவுக்கு வளைகாப்பு செய்ததாக, காவல் ஆய்வாளர் வீரக்குமார் நெகிழ்ச்சியுடன் கூறினார். காவல் நிலையத்தில் சொந்தபந்தங்கள்போல, காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சி, பெண் காவலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.