தண்ணீர், தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க மரவள்ளி கிழங்கு சாகுபடியில் சேலம் விவசாயிகள் ஆர்வம்


மேட்டூரை அடுத்த சாணாவூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கு நன்கு செழித்து வளர்ந்துள்ளது.

மேட்டூர்: தண்ணீர், தொழிலாளர்கள் பற்றாக் குறையை சமாளிக்க, மரவள்ளிக் கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் மேட்டூர், எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது. இங்குள்ள கிராமப் பகுதிகளில் வாழை, பருத்தி, நெல், கரும்பு, காய் கறி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. ஏரி, குளம், கிணறு பாசனத்தை நம்பியும், பருவ மழையை எதிர்பார்த்தும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால், கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் ஏரி, குளங்கள் அனைத்தும் வறண்டு காட்சியளிக்கின்றன. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து விட்டதால் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது.

இந்நிலையில் தண்ணீர் பற்றாக் குறையை சமாளிக்க குறைவான தண்ணீர் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. எனவே, மரவள்ளி சாகுபடியை விவசாயிகள் ஆர்வமுடன் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மேட்டூர், கொளத்தூர், எடப்பாடி, தேவூர், மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடப்பாண்டில் மரவள்ளி சாகுபடி அதிகரித்துள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. ஏரி, குளம் வறண்டும், நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. தண்ணீர் பிரச்சினை, வேலையாட்கள் பற்றாக்குறை, தொடர் பராமரிப்பு, உரம், பூச்சி மருந்து விலை உயர்வு போன்ற காரணங்களால் நெல், வாழை, கரும்பு உள்ளிட்டவற்றின் சாகுபடியை விவசாயிகள் குறைத்துக் கொண்டு வருகின்றனர். மரவள்ளி கிழங்குக்கு வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும், சொட்டு நீர் பாசன முறையும் கைகொடுக்கிறது.

அதேபோல, பராமரிப்பு செலவும் குறைவு; கண்காணிப்பும் தேவையில்லை. எனவே, மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்துள்ளோம். மரவள்ளியை சாகுபடி செய்வதால், ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும். மேட்டூர், எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்துள்ள மரவள்ளி கிழங்கு நன்கு செழித்து வளர்ந்துள்ளது. கடந்தாண்டை விட, நடப்பாண்டில் மரவள்ளிக் கிழங்குக்கு நல்ல விலை கிடைக்கும் என நம்புகிறோம், என்றனர்.